நன்றி குங்குமம் டாக்டர் விநோதம்சமயம் சார்ந்ததாக பின்பற்றப்பட்டு வந்த விரதத்தினை தற்போது நவீன மருத்துவமும் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறது. அதில் Intermittent fasting என்பது போல பல்வேறு விதமான வகைகளும் இருக்கின்றன. இதே போல இண்டர்நெட் விரதமும் காலத்தின் கட்டாயம் என்று சொல்கிறார்கள் ஜப்பானிய உளவியலாளர்கள். சொன்ன கையோடு தங்கள் நாட்டில் அமல்படுத்தவும் தொடங்கிவிட்டார்கள்.சமீபத்தில் நடிகர் விவேக் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இந்த இண்டர்நெட் ஃபாஸ்டிங் பற்றிய செய்தியை பதிவிட்டிருந்தது வைரலாகவும் ஆனது. எல்லோருக்கும் இன்றைய அவசியத் தேவையான இண்டர்நெட் விரதம் பற்றி நாமும் தெரிந்துகொள்வோம்…மொபைல் பயன்பாடு அதிகரித்த பின்னால் ஜப்பான்வாசிகளால் செல்போன் இல்லாமல் இருக்கவும் முடியவில்லை; இயங்கவும் முடியவில்லை. எந்த நேரமும் ஆன்லைனிலேயே இருப்பது வழக்கமாகிவிட்டது.கழிவறைக்குச் சென்றால் கூட செல்போனுடன் செல்லும் அளவுக்கு அடிமையாகிவிட்டார்கள் இணையதள அடிமைத்தனத்துக்கு எல்லோருமே ஆட்பட்டிருந்தாலும் 12 முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக, ஜப்பானில் 5 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இண்டர்நெட் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் கவலையடைந்த அரசாங்கம் நாடு முழுவதும் இன்டர்நெட் ஃபாஸ்டிங் முறையை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.வாரம் இரண்டு நாள் இணையதளத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் இந்த Internet Fasting. அந்த இரு நாட்களில் நண்பர்கள், விளையாட்டு, இயற்கை என்று ஆக்கப்பூர்வமான வழிகளில் நேரத்தை செலவிட ஜப்பான் அரசாங்கம் தங்களுடைய மக்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளது. அதற்கேற்ற வகையில் ‘இணையம் இல்லாத உண்ணாவிரத முகாம்களை’யும் ஏற்பாடு செய்திருக்கிறது.‘இண்டர்நெட் ஃபாஸ்ட்டிங்கால் மனம் ரிலாக்ஸ் ஆவதுடன் இண்டர்நெட்டுக்கு அடிமையாகும் ஆபத்தும் நீங்குகிறது. குற்றச்செயல்களும் குறைகிறது என தெரிய வந்துள்ளது. எனவே, இளையதலைமுறை அந்த இரண்டு நாட்களில் பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுங்கள், விளையாட்டில் ஈடுபடுங்கள்’ என்று ஜப்பானிய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஜப்பானின் இந்த புதிய முயற்சிக்கு நாடுகள் கடந்தும் பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.– க.இளஞ்சேரன்