உத்திரமேரூர், மே 20: உத்திரமேரூரில் இணையவழியில் ஆவணங்களைப் பெற பழங்குடியினருக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. உத்திரமேரூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் பழங்குடியினர் மக்கள் அரசு ஆவணங்கள், சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பள்ளி கல்லூரிகளில் சேர விண்ணப்பித்தல், பட்டா மாறுதல் பட்டா விண்ணப்பங்கள், ரேஷன் கார்டு பெயர் மாற்றம், நீக்கம் மற்றும் சேர்த்தல் என இ-சேவை மூலம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் கண்காணிப்பகம் நிர்வாகி ராஜி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் தங்கவேலு இ-சேவை மையத்தில் சான்றிதழ்களை எளிதில் பெறுவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார். நிகழ்வின் போது குழந்தைகள் கண்காணிப்பகம் சார்பில் ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாத பழங்குடியினர் மக்களுக்கு ஆவணங்கள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.