சென்னை: உயர் கல்வியில் இடை நிற்றலை தடுக்கும் வகையில் புதுமை பெண் கல்வி திட்டம் துவங்கி இருப்பது ஏழை, எளிய மாணவர்கள் மீது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது என தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி வெளியிட்ட அறிக்கை: கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 85% வாக்குறுதிகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றி, மகத்தான சாதனைகளை புரிந்து வருகிறார். 60 மாதங்களில் நிறைவேற்ற வேண்டியதை 22 மாதங்களில் 85% நிறைவேற்றியிருப்பது மிகப்பெரிய சாதனையாகும். இன்னும் எஞ்சியிருக்கிற 15% வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுகிற உறுதியை முதலமைச்சர் வெளிப்படுத்தியிருக்கிறார்.பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவியருக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கப்படுவது மிகச் சிறந்த திட்டமாகும். இதனால் ஏழை, எளிய மாணவர்களின் பள்ளி வருகை உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சாதனைகளின் மகுடமாக மருத்துவ படிப்பு, பல் மருத்துவ படிப்புகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டில் எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று முதலமைச்சர் ஆணை பிறப்பித்திருக்கிறார். இது பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும் என்று கூறியிருப்பது ஏழை, எளிய மாணவர்கள் மீது தமிழக முதலமைச்சருக்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது. தமிழகத்தின் மீது நீட் தேர்வை திணித்து பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் மத்திய பாஜக அரசும், நீட் விலக்கு மசோதாவை முடக்கி வைத்திருக்கும் தமிழ்நாடு ஆளுநரும் தமிழ்நாட்டிற்கு விரோதமாக செயல்படுகிற நேரத்தில் இத்தகைய நடவடிக்கைகள் மிகுந்த மன ஆறுதலைத் தருகிறது.பள்ளி கல்வியில் படிக்கிற பெண்கள் உயர்கல்வியில் சேராமல் இடை நிற்றலை தடுக்கும் வகையில் புதுமைப் பெண் கல்வி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கியிருப்பதை தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பாக மனதார வரவேற்கிறேன். இத்திட்டத்தின் மூலம் உயர்கல்வியில் சேரும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை என முதற்கட்டமாக 1 லட்சத்து 16 ஆயிரம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். தற்போது இரண்டாம் கட்டமாக 1 லட்சம் மாணவிகள் பயன்பெறுகிற இத்திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார். இது பெண்கள் கல்வியில் புரட்சிகரமான நடவடிக்கையாக கருதுகிறோம். இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழக மாணவர்கள் சார்பாக பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்….