புதுச்சேரி, ஜூன் 23: இடையார் பாளையம் பாலத்துக்கு அருகே தனியார் படகு குழாமினர் குவித்து வைத்திருந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி- கடலூர் பிரதான சாலையில் இடையார்பாளையத்தில் ஆற்றின் குறுக்கே பாலம் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் பாலம் சேதமடைந்தது. பொதுப்பணித்துறை ரூ.45 லட்சம் மதிப்பில் பாலத்தை சீரமைத்தது. இதற்கிடையே பாலத்தின் அருகே உள்ள தனியார் படகு குழாமின் குப்பை கழிவுகளை பாலத்தின் அருகே கொட்டி வைத்திருந்ததாக தெரிகிறது.
மர்ம நபர்கள் யாரோ சிலர் இந்த குப்பைகளுக்கு தீ வைத்ததால், தீப்பற்றி எரிந்து அருகில் இருந்த மின் வயரிலும் பற்றிக்கொண்டது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். சம்பவ இடத்துக்கு உடனே வந்த மின்துறை அதிகாரிகள், காவலர்கள் தண்ணீர் ஊற்றியும், சிறிய பைப் மூலம் தண்ணீரை பீச்சியடித்தும் முடிந்தவரை தீயை அணைத்தனர். காலதாமதமாக வந்த தீயணைப்புத்துறையினர், தண்ணீர் ஊற்றி தீயை முழுவதுமாக அணைத்தனர்.
தனியார் படகுழு குழாம் நிறுவனத்தின் குப்பைகளை கொட்டி வைத்திருந்ததை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினரா அல்லது மின் கம்பங்களில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.