சிவகங்கை, செப். 22: அங்கக வேளாண் தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்ள இடையமேலூரில் உள்ள இயற்கை வேளாண் பண்ணையை விவசாயிகள் பார்வையிட்டனர். சிவகங்கை அருகே சேந்தி உடையநாதபுரம், பாசாங்கரை கிராம விவசாயிகள் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை பற்றிய கண்டுணர்வு சுற்றுலாவாக இடையமேலூர் கிராம இயற்கை வேளாண் பண்ணையை பார்வையிட்டனர். வேளாண்மை உதவி இயக்குநர் வளர்மதி அங்கக வேளாண்மை குறித்து தொழில்நுட்ப கருத்துரை வழங்கினார்.
இயற்கை விவசாயி குமார் பஞ்சகவ்யா, அமிர்தகரைசல், மீன் அமிலம், மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய நேரடி செயல் விளக்கம் செய்து காண்பித்தார். வேளாண்மை அலுவலர் யோகேஸ்வரன் அங்கச்சான்று எப்படி பெறுவது பற்றி என்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். வேளாண்மை அலுவலர் ஞானபிராதா அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து பேசினார். சுற்றுலா ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பானுப்பிரியா, அட்மா திட்ட தொழில் நுட்ப அலுவலர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் கவிதா செய்திருந்தனர்.