இடைப்பாடி, ஆக.11: இடைப்பாடி மேட்டுதெரு மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தீமிதித்தல் நேற்று காலை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோயில் முன் அக்னி குண்டம் வளர்க்கப்பட்டு தீமிதித்தல் தொடங்கியது. முதலில் கோயில் பூசாரி கரகத்தை தலையில் தூக்கியபடி குண்டம் இறங்கினார். தொடர்ந்து ஆண்- பெண்கள், சிறுவர்கள் என வரிசையில் நின்று குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார். பெண்கள் கைக்குழந்தையை தூக்கிக்கொண்டும், அலகு குத்திய படியும் தீ மிதித்தனர். 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். இதேபோல், க.புதூர் ஓங்காளியம்மன் கோயிலில் தீமிதி விழா நடந்தது. இதில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி, இடைப்பாடி இன்ஸ்பெக்டர் சந்திரலேகா தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.