அரியலூர், ஆக. 21: அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கான ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் கீழப்பழுவூரில் உள்ளது. இதில் வேளாண் உதவி இயக்குனராக எழில் ராணி என்பவர் கடந்த ஒரு வருடமாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திருமானூர் ஒன்றிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் கவிதா, உதவி ஆய்வாளர் ரவி ஆகியோர் தலைமையில் 8 பேர் கொண்ட போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது கணக்கில் வராத ரூ.4.40 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் மானாவாரி மக்காச்சோள விரிவாக்கத் திட்டத்தின் கீழ் 10 கிலோ மக்காச்சோளம் 500, மில்லி நானே யூரியா, இயற்கை உரம் 12.5 கிலோ உள்ளிட்ட மானியத்துடன் கூடிய சிறப்பு தொகுப்பு வழங்க ஒவ்வொரு விவசாயியிடம் இருந்தும் தலா ரூ.540 வீதம் கூடுதலாக பெற்றுள்ளது தெரியவந்தது. மேலும் விவசாயிகளுக்கான பல்வேறு இடுப்பொருட்கள் வழங்கல் விதைகள் உள்ளிட்டவை வழங்க விவசாயிகளிடமிருந்து லஞ்சம் பெற்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வாராக பணத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.