மூணாறு, ஜூன் 30: கேரளா மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை சற்று முன்னதாக தொடங்கிய நிலையில் கடந்த மூன்று நாட்கள் முன்பு வரை இடுக்கி மாவட்டம் மூணாறு உட்பட பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் படகு சவாரி மற்றும் சாகச சுற்றுலா மையங்கள் அனைத்தும் அடைத்து பூட்டப்பட்டன. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது.
ஆனால் தற்போது இரண்டு நாட்களாக மழை குறைந்து பரவலாக பெய்து வரும் நிலையில் மாட்டுப்பட்டி, குண்டளை மற்றும் செங்குளம் போன்ற அணைக்கட்டுகளில் படகு சவாரி நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதே நேரம் வரும் நாட்களில் கன மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வரவு மிக குறைவாகவே உள்ளது. இதனால் சுற்றுலாவை நம்பி வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.