பள்ளிப்பட்டு, மே 29: பள்ளிப்பட்டு அருகே பொதாட்டூர்பேட்டையில் பேருந்து நிலையம் அருகில் வருவாய ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த, அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளரை சந்திக்க தினமும் 100க்கும் மேற்பட்ட மக்களும், பொதட்டூர்பேட்டை குறு வட்டத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளார்களும் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்தில் வருவாய்த்துறை குறுவட்ட அளவிலான முக்கிய ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டிடம் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பதால், தற்போது பழுதடைந்து காணப்படுகிறது. மேலும், சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், மழை காலங்களில் அலுவலகம் உள்ளே மழைநீர் ஒழுகுவதாலும், தேங்கி நிற்பதாலும் ஆவணங்கள் நனைந்து வீணாகின்றன. கட்டிடத்தின் மேல்தள சிமெண்ட் பூச்சு பெயர்ந்தும், இரும்பு கம்பிகள் துருப்பிடித்தும் பலவீனமாக உள்ளது. இதனால் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் பொதுமக்கள் போதுமான இடவசதி இல்லாததால், அலுவலகத்திற்கு முன்பு சாலையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, பலவீனமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள கட்டிடத்தை அப்புறப்படுத்தி, புதிய கட்டிடம் கட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.