தொண்டி, நவ.10: தொண்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஆபத்து ஏற்படும் முன்பு சுற்றுச்சுவரை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி ஆரம்ப சுகாதார நிலையம் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு புதிய கட்டிடத்தில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாகதரம் உயர்த்தப்பட்டது.
அப்போது கட்டிய கட்டிடங்களை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இந்த சுவர் கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு விழும் நிலையில் உள்ளது. ஒரு இடத்தில் பெரிய மரமே வளர்ந்து விரிசல் விட்டு நிற்கிறது. அருகில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு செல்வோர் இந்த சுவற்றின் அருகே தான் டூவீலர் மற்றும் கார்களை நிறுத்தி செல்கின்றனர்.
அதிகமான மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் விதமாக இடிந்த நிலையில் உள்ள சுற்றுச்சுவரை உடனடியாக அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சுரேஷ் கூறியது, கிழக்கு கடற்கரை சாலையோரம் மருத்துவ மனையின் சுற்றுச்சுவர் விழும் நிலையில் உள்ளது. தினமும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ரோட்டின் வழியாக செல்கின்றனர். தற்போது மழை காலம் என்பதால் எப்போது விழும் என்று அச்சமாக உள்ளது. விபத்து நடக்கும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.