செய்யூர், அக் 17: செய்யூரில் உழவர் சந்தை கட்டிடம் அமைத்து தரவேண்டும் என வாரச்சந்தை நடத்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பகுதியில் வாராந்தோறும் திங்களன்று பஜார் பகுதியில் இருந்து செய்யூர் காவல் நிலையம் செல்லும் சாலையில், வியாபாரிகள் வாரச்சந்தை நடத்தி வருகின்றனர். செய்யூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த காய்கனிகள், பல்வேறு வகையான பூக்களை கொண்டு வந்து இங்கு விற்பனை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கடலோரம் உள்ள மீனவர்கள் தாங்கள் கொண்டு வரும் மீன்களையும் இங்கு வியாபாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு வியாபாரம் செய்யும் விவசாயிகள் மற்றும் மீன்வர்களுக்கு வியாபாரம் செய்ய இந்த சாலைப் பகுதி போதுமானதாக இல்லை.
இதனால் விவசாயிகள் சாலையோரம் நெருக்கடியில் அமர்ந்து வியாபாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் அதிகம் கூடும் நாட்களில் சாலைகளை ஆக்கிரமித்துக் கொண்டு விவசாயிகள் வியாபாரம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. எனவே இங்கு வாரச்சந்தை நடத்தும் விவசாயிகள், செய்யூர் பகுதியில் தங்களுக்கென்று தனி உழவர் சந்தை கட்டிடம் கட்டி தர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதற்கான நடவடிக்கையில் ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இன்று வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வாரந்தோறும் வாரச்சந்தையின் போது இந்த சாலையில் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கடந்து செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் அவ்வப்போது இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே வாரச்சந்தை நடத்தும் வியாபாரிகள் நலன் கருதி, அவர்களுக்கென இப்பகுதியில் தனியாக உழவர் சந்தை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.