மதுரை, ஜூலை 4: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கோயில் முன்பு நிறுத்தப்பட்ட காரில் வைத்திருந்த 10 சவரன் நகை மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக, வழக்கு பதியப்பட்டு போலீசார் நடத்திய விசாரணையில், கோயிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமார் உயிழந்தார். இதையடுத்து போலீசாரை கண்டித்து, இடதுசாரிகள் கூட்டமைப்பு சார்பில், மதுரையில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று இடதுசாரிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பின் குமரன், பியூசிஎல் மாநில தலைவர் முரளி, மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் மருது, ஆதித்தமிழர் பேரவை செயலாளர் கார்த்திக் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, அஜித்குமார் கொலைக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்த எஸ்பியை பணி நீக்கம் செய்ய வேண்டும், டிஎஸ்பியை கொலை வழக்கில் சேர்க்க வேண்டும், அஜித்குமாரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.