Monday, May 29, 2023
Home » இசை என்னும் மருத்துவம்!

இசை என்னும் மருத்துவம்!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்கருவிலேயே தாயின் இதயத்தாளத்தை ரசிக்கத் தொடங்கி, பிறந்தவுடன் தாயின் தாலாட்டில் தொடர்ந்து, பின் இறப்பில் ஒப்பாரி பாட்டு என மனிதனின் வாழ்க்கைப் பயணத்தில் இசை இல்லாத நொடியே இல்லை. எல்லா மதத்திலும், எல்லா இறை வழிபாட்டிலும் இசைக்கும் இசை கருவிகளுக்கும் தனி இடம் உண்டு.‘மலைபடுகடாம்’ என்ற சங்க இலக்கியப் பாடலில் வீரர்களின் விழுப்புண்ணை இசை பாடி ஆற்றினர் என்ற குறிப்பு உள்ளது. மேலும் மனிதனின் பல நோய்களை குணமாக்கும் சக்தி கர்நாடக இசையில் உள்ள பல ராகங்களுக்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி பலவாறு, இசையின் அருமையைப்பற்றி நம் முன்னோர்கள் சொல்லி வைத்ததை இன்று பல ஆராய்ச்சிகள் மூலம் விஞ்ஞானிகள் நிரூபித்தும் வருகின்றனர்.இசை மூளையில் எவ்விதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை நரம்பியல் மருத்துவர் கண்ணன் விவரிக்கிறார்… ‘‘அறிவியல்ரீதியாக இதை அறிந்து கொள்ள மூளை மின்னலைகளைப் பற்றி முதலில் சிறிது தெரிந்துகொள்ள வேண்டும். மூளையின் Cerebral cortex என்று அழைக்கப்படும் பகுதி மூளையின் மேல்பகுதியில் அமைந்திருக்கும் பல மடிப்புகளைக் கொண்ட வெளி அடுக்கு. இதைத் தமிழில் மூளை மேலுறை என்று சொல்லலாம். இதில் கோடிக்கணக்கில் நியூரான்கள் உள்ளன. ஒரு சதுர மில்லி மீட்டர் அளவில் (ஒரு கடுகின் அளவில்) சுமார் 10 லட்சம் நியூரான்கள் உள்ளன என்றால் எத்தனை கோடானு கோடி நியூரான்கள் மூளை இணைப்பில் உள்ளன என்று ஊகித்துப் பிரமிக்கலாம். இந்த நியூரான்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. மற்ற மூளைப் பகுதிகளிலிருந்து தகவல் முதலியவற்றின் உள்ளீடுகளைப் பெறுகின்றன. நரம்புத் தூண்டுதலினால் நிகழும் இந்த மின் செயல்பாட்டை தூக்கத்தில் கூட ஓயாமல் அனுப்புதல் மற்றும் பெறுதல் வேலைகளை செய்கின்றன. இந்த மூளைச் செயல்பாடு நின்றுவிட்டால் அதையே உடல்ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும், சட்டரீதியாகவும் மரணம் என்கிறோம். புலன்கள் அனுப்பும் அனைத்தையும் பெற்று நியூரான்கள் மூளை மேலுறையில் செய்யும் செயல்பாட்டை அளப்பதை Electro encephalogram அல்லது EEG என்கிறோம். ஒரு ஈஈஜி எலக்ட்ரோடை மண்டையில் இணைத்துவிட்டால் போதும். அதன் அடியில் உள்ள மூளையின் செயல்பாட்டை அது துல்லியமாகக் காட்டி விடும். ஈஈஜி. சீரான இடைவெளியில் வருகிற ரிதம்களை ஆல்பா, பீட்டா, டெல்டா மற்றும் தீட்டா என 4 வகைகளாகப் பதிவு செய்கிறது. இவற்றை ஃப்ரீக்வென்ஸி (அலைவரிசை அல்லது அலைவெண்) என்று இனம் கண்டு ஹெர்ட்ஸ் அல்லது வினாடிக்கு இத்தனை சைக்கிள் (Hz or cycles/sec) என்றும் ஆம்ப்ளிட்யூட் எனவும் அளக்கிறோம்.ஆல்பா நிலை என்பது மனம் ஓய்வாக, அமைதியாக இருக்கும் நிலை. மனதில் இருக்கும் டென்ஷனை மட்டும் ஒருவர் அகற்ற முடியுமானால் ஒரே நிமிடத்தில் கண்களை மூடிய நிலையில் இந்த நிலையை அடைந்துவிடலாம். ஆல்பா நிலையில் இருக்கும்போது படைப்பாற்றல் திறன் எனப்படும் Creativity அதிகரிப்பதாக ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆகவேதான் பல தியான வகுப்பு விளம்பரங்கள் உங்களை ‘ஆல்பா’ நிலைக்கு அழைத்துச் செல்வதாகத் தம்பட்டம் அடிக்கின்றன. பகல் கனவு காண்போரும் இந்த நிலையில்தான் இருப்பர். தியானத்தின் மூலம் ஆல்பா நிலையை அடைய முடியும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதைப் போலவே, சில குறிப்பிட்ட இசை மூலமாகவும் ஆல்பா நிலையை அடைய முடியும். நம்முடைய மூளை அலைகளின் அதிர்வெண்கள் நமது மனநிலைக்கு ஏற்ப மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக நீங்கள் எச்சரிக்கை உணர்வில் இருக்கும் போது மூளை அலைகள் பீட்டா தொடர் வரிசை அதிர்வெண்களில் உள்ளன. அதுவே, பகல் கனவு காணும் அரை தியான நிலையில், அவை ஆல்பா தொடர்வரிசை அதிர்வெண்களில் இருக்கும். விஞ்ஞானிகள் இப்போது பெயர் சூட்டியுள்ள பைனரல் பீட்ஸ் (Binaural beats) இசைக்குள் அடங்கியுள்ளன. ஆராய்ச்சிகளின் மூலமாக சில விதமான ராக, தாளங்களைக் கேட்கையில், மூளை மிக ஓய்வான நிலையைப் பெறுவதை விஞ்ஞானிகள் இப்போது உறுதிப்படுத்தியுள்ளனர். 10 ஹெர்ட்ஸ் அதிர்வெண் இருந்தால் போதும், மூளை அமைதியடைந்துவிடும். இசைதரும் அதிர்வெண் ஒரு மாமருந்து என்றால் இந்த அதிவேக யுகத்தில் அது மிகையல்ல. இதற்கு ஆதாரமாக,’இசையைத் தொடர்ந்து கேட்டால் அல்லது பயின்றால், அது அடுத்த உயர்ந்த நிலையான ஆல்பா நிலைக்கு உயர்த்தி விடுகிறது’என்ற செய்தியை, பிரிட்டனில் இருந்து வெளிவரும் New Scientist பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்பாக Scientific American, Nature ஆகிய பத்திரிகைகளிலும் நரம்பியல் தொடர்பான நூல்களிலும் இதே கருத்து வெளியாகி இருக்கிறது. இசை என்பது காதோடு மட்டும் நிற்பதல்ல. இசையின் நுண்ணலைகள் நம்முள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை படைத்தவை. இசையில் புகழ்பெற்ற, திறமைமிக்க 36 பேர்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களில், பாதிப்பேர் 7 வயதுக்கு முன்னரே இசையைக் கற்கத் துவங்கியவர்கள். மீதி பாதிப்பேர் 7 வயதுக்குப் பின்னர் இசையைக் கற்கத் துவங்கியவர்கள். எல்லோரையும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் (Magnetic Resonance Imaging Scan) செய்து பார்த்தனர். ஓர் அதிசயமான உண்மை அதில் தெரிய வந்தது. மனிதர்களின் மூளையின் இரண்டு பிரிவுகளை இணைக்கும் Corpus callosum, சிறு வயதிலேயே இசையைக் கற்றவர்களுக்கு நன்றாக வளர்ச்சி பெற்றிருப்பது தெரிய வந்தது. இதே கருத்தை Max Planck Institute for Human Cognitive and Brain Sciences, Leipzig, Germany நிறுவனத்தின் தலைமை ஆய்வாளரான கிறிஸ்டோபர் ஸ்டீல் அறிவித்துள்ளார். இசை பயில்பவர்களுக்கு, பல மொழிகளைக் கற்கும் திறன் அதிகரிக்கும் என்றும் பெரும் இரைச்சலில் இருந்து சொற்களைப் பிரித்தெடுக்கும் சக்தி அதிகம் என்பதையும் Journal of Neuro science இதழ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அடுத்து, வயது மூப்பின் காரணமாக மூளையின் செயல்பாடு குறையும் என்பது பொது விதி. ஆனால் இசை கற்று தொடர்ந்து பயிற்சி செய்வோரிடம், மூளைத் தேய்மானம் அந்த வேகத்தில் இல்லை. நினைவாற்றல் தேர்விலும், வேகமாக எதையும் புரிந்து கொள்ளும் தேர்விலும் இசை பயின்றவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள் என்பற்கான ஆதாரத்தை 2012 July issue of Frontiers in Human Neuroscience வெளியிட்டுள்ளது.இசை கற்பது எந்த அளவிற்கு மனித மூளை இயக்கத்திற்குப் பயன்படுகின்றது என்பதை வயது முதிர்ந்த நிலையில் அனேகமாகப் பலர் உணர்ந்திருக்கிறார்கள். குழந்தைப்பருவத்தில் கற்றுக் கொண்ட இசை பாடங்கள் பல வருடங்கள் கழித்தும், மூளையில் ஏற்படுகிற பல்வேறு சிக்கல்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றன என பல ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். சிகாகோ நகரின் ‘இலிநொயிஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் நரம்பியல் நிபுணர்கள் இசை மற்றும் மூளை சம்பந்தமான பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இளம் வயதில் வாத்தியக் கருவிகளை இயக்குபவர்களுக்கு, அவர்கள் வளர்ந்த பின்பும், அவற்றை இயக்காவிடினும் அவர்களுக்குச் சிறந்த நினைவாற்றல் இருப்பதாகவும் தெரியவருகின்றது. இசைப் பயிற்சியானது மூளையின் அறிவாற்றல் திறன் வளர்ச்சியடைவதற்குத் துணை புரிகிறது என்பதை அவர்கள் ஆய்வில் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பது, அவர்களின் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நல்ல அனுபவத்தை ஏற்படுத்துவதோடு, கற்பனைத் திறனை விரிவடைய செய்கிறது என்று ஆய்வு கூறுகிறது. குறைந்தபட்சம் ஒரு வருடமாவது இசை பயிற்சி அளிப்பது மூளை பலப்படும், நினைவாற்றலை அதிகரிக்கும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது. ஆயுர்வேதம், சித்தா போன்ற இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளைப் போலவே, மியூசிக் தெரபியும் குறைந்தது, 5,000 ஆண்டுகள் பழமையானது. நரம்பு செல்களைத் தூண்டி, சீர் செய்வதற்காக பிரத்யேகமான இசைகள் உள்ளன. பிரச்னை எதனால், எப்படி ஏற்பட்டு உள்ளது என்பதையும், அதற்கேற்ற இசை எது என்பதையும், இந்தத்; துறையில் பயிற்சி பெற்ற நிபுணரால் கூற முடியும். ‘அல்சைமர் போன்ற மூளையில் ஏற்படும் நரம்பு செல்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு, தொடர்ந்து மியூசிக் தெரபி தரும் போது, அவர்களின் செயல்கள் மேம்படுகின்றன. மருந்து, மாத்திரை எதுவானாலும், செரிமானம் ஆகி, ரத்தத்துடன் கலந்து பின்னர், பிரச்னையை சரி செய்யும். ஆனால், இசை, காது வழியாக நேராக மூளைக்கு செல்வதால், பலன் அதிகம். மியூசிக் தெரபியுடன் சேர்த்தே, நேராக செய்யும் வேலையை, தலைகீழாகச் செய்யச் சொல்வோம். அதாவது முன்னோக்கி நடப்பதற்கு பதில், பின்நோக்கி நடப்பது, வாய்ப்பாட்டு, ஸ்லோகம், குறள், எண்கள் என அனைத்தையும் தலைகீழாக சொல்லிப் பழக வேண்டும். ஒரு பொருளில் தூசு படர்ந்திருந்தால், லேசாகத் தட்டினால் தூசி போய்விடுவதைப் போல, இசையுடன் சேர்ந்த பயிற்சியால், மூளையில் உள்ள நியூரான்களும், இறந்த செல்களை விலக்கி, புதுப்பித்துக் கொள்ளும். எல்லாவிதமான உடல், மனப் பிரச்னைகளுக்கும், இசை மிகச் சிறந்த மருந்து என்பதில் சந்தேகமே இல்லை.’’;உஷா நாராயணன்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi