திருப்போரூர், ஜூன் 26: சென்னையில் பேட்டரியால் இயங்கும் பேருந்துகள் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில், தற்போது டீசலில் இயங்கும் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் வகையில் பேட்டரியால் இயங்கும் 500 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, பேட்டரியால் இயங்கும் பேருந்துகள் வாங்கப்பட்டு, தற்போது பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பேட்டரியை ரீசார்ஜ் செய்யும் வகையில் அவற்றுக்குத் தேவையான சார்ஜிங் சென்டர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அது முடிந்த பிறகே பேட்டரி வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே நேற்று சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கோவளம் வரை பயணிகள் இன்றி பேட்டரி பேருந்துகளின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.