கோவை, ஜூலை 3: ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில், இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெற்ற 196வது இஎஸ்ஐ கார்ப்பரேஷன் கூட்டத்தில், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் SPREE 2025 (முதலாளிகள் மற்றும் ஊழியர்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான திட்டம்) என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.SPREE திட்டம் என்பது தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தால் (ESIC) அங்கீகரிக்கப்பட்ட முதலாளிகள் மற்றும் ஊழியர்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான திட்டமாகும். இது, இ.எஸ்.ஐ சட்டத்தின்கீழ் சமூக பாதுகாப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாக கொண்ட ஒரு சிறப்பு முயற்சியாகும். இந்த திட்டம் ஜூலை முதல் டிசம்பர் 2025 வரை அமலில் இருக்கும். இந்த திட்டம் பதிவு செய்யப்படாத முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் (ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் உட்பட), ஆவண ஆய்வுகளையும் கடந்த கால நிலுவை தொகைகளுக்கான கோரிக்கைகளையும் எதிர்கொள்ளாமல் பதிவுசெய்ய ஒரு முறை வாய்ப்பை வழங்குகிறது.
இத்திட்டம், விடுபட்ட தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களை இஎஸ்ஐ-க்குள் கொண்டுவந்து, பரந்த சமூக பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. முதலாளிகள் தங்கள் பணியாளர்களை ஒழுங்குபடுத்த ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், அதிக தொழிலாளர்கள், குறிப்பாக ஒப்பந்த துறைகளில் உள்ளவர்கள், அமைப்பு சார்ந்து இஎஸ்ஐ சட்டத்தின்கீழ் அடிப்படை மருத்துவ மற்றும் சமூக நலன்களை பெறுவதை உறுதி செய்கிறது. இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் அருகில் உள்ள இஎஸ்ஐ கிளை அலுவலகம் அல்லது சார்-மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.