காரைக்கால், ஜூன் 30: காரைக்காலில் திமுக எம்.பி ராசாவை அவமதித்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாக தியாகராஜன் தலைமையில் திமுகவினர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 27ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தரக்குறைவாக விமரிசித்ததாக கூறி திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து மாவட்ட பாஜக சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்பாட்டத்தின் போது பாஜக மகளிர் அணியினர் திடீரென திமுக எம்.பி ஆ.ராசாவின் பெரிய அளவு புகைப்படத்தை அவமதித்தும், படத்தை கிழித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, திமுக துணைப்பொதுச் செயலாளரும் நீலகிரி தொகுதி எம்.பியுமான ஆ.ராசாவை அவமதிக்கும் வகையில் பாஜக மகளிரணியினர் தரம் தாழ்ந்து செயல்பட்டதை கண்டித்தும், பாஜக மகளிரணியினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாக தியாகராஜன் மற்றும் திமுக நிர்வாகிகள் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணியனிடம் புகார் மனு அளித்தனர்.