அறந்தாங்கி, ஆக.15: ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் அலுவலகம் முன் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நரிக்குடி பகுதியில் உள்ள குளம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அப்புறப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் வட்டாட்சியர் அலுவலகம் முன் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏம்பல் ஊராட்சியில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான இடத்தை அளந்து இடத்தை சரிசெய்ய வேண்டும். ஒக்கூர் பகுதியில் எந்த செல்போன் நெட்வொர்க்கும் கிடைக்கவில்லை. அதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நரிக்குடி பகுதியில் உள்ள குளத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். ஆக்கிரமிப்பை அப்புறபடுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து வட்டாட்சியர் மார்ட்டின் லூதர்கிங் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தி அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.