ஆவடி, செப். 6: சாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற பெண்ணால் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. ஆவடி நேரு பஜார், மார்க்கெட் பகுதியில் சாலையோர வியாபாரிகள் போக்குவரத்து இடையூறாக கடையை நடத்தி வருகின்றனர். ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல் அதிகாரிகள், காவல் அதிகாரிகள், வட்டாட்சியர், வருவாய் அதிகாரிகள் போக்குவரத்து இடையூறாக இருப்பதால் அகற்றச் சொல்லி பலமுறை எச்சரிக்கை விடுத்தனர். மேலும் கடைகளையும் அகற்றினர். எனினும் சாலையோர வியாபாரிகள் மீண்டும் ஒரு மணி நேரத்தில் கடையை அமைப்பதை வழக்கமாக செய்து வருகின்றனர். இதனால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
ஆவடி மாநகராட்சிக்கு கடந்த மாதம் பொறுப்பேற்ற ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி சாலையோர வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு நாள் அவகாசம் கொடுத்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த சாலையோர வியாபாரிகள் மீண்டும் சாலையோரம்தான் வைக்க முடியும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று திடீரென்று ஆவடி மாநகராட்சி அதிகாரி கந்தசாமி கூறியதை கண்டித்து திடீரென்று மாலை 30க்கும் மேற்பட்ட பெண்கள் 15 நிமிடம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காய்கறி வியாபாரம் செய்து வரும் மார்க்கெட் பகுதியை சேர்ந்த கோகிலா(48) என்ற பெண்மணி திடீரென்று அதிகாரிகளை மிரட்ட வேண்டும் என்று பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொளுத்துவது போல் நாடகம் ஆடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், நீங்கள் எப்படியாவது போங்கள் என்று கூறிவிட்டு சம்பவ இடத்திலிருந்து சென்றுவிட்டனர்.