ஆவடி, ஆக. 3: ஆவடி காவல் ஆணையரம் சார்பில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. அப்போது நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றமடைந்த 100க்கும் மேற்பட்டோர் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளரை சூழ்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் திருமுல்லைவாயல் உள்ள கன்வெர்ஷன் ஹால் நேற்று நடந்தது. இதில், தீர்வு காணப்படாத 126 புகார் மனுக்களில், 106 மனுக்கள் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், பொதுமக்களிடம் இருந்து 46 புதிய மனுக்கள் நேரடியாக பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாயிலாக தீர்வு காண ஆவடி காவல் ஆணையர் சங்கர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதில், ஜாய்ஸ் என்கிற நிதி நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ததாகவும், அதன் மேனேஜர் ஜாக்ஸ் விக்டோரி என்பவர் பல கோடி ரூபாயை வசூல் செய்துவிட்டு, தற்போது எங்களை ஏமாற்றிய வருவதாக கூறி, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 100க்கும் மேற்பட்டோர் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆணையர் ஆகியோரை சூழ்ந்து கொண்டனர். தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து குறைத்தீர்க்கும் முகாமில் கோஷங்களை எழுப்பினர். ஜாக்ஸ் விக்டோரியை கைது செய்ய வேண்டும், தங்களுடைய பணத்தை மீட்டு தருமாறும் கோஷங்களை எழுப்பினர். மேலும். அவர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட முயன்றால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சாலையிலிருந்து மீண்டும் மண்டபத்தின் நுழைவாயில் அருகே அழைத்து வந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி போலீசார் சமாதானம் செய்ய முயற்சிகளில் ஈடுபட்டனர்.