ஆவடி, அக். 29: ஆவடி போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், வியாபாரிகளுக்கு கொடுத்தனர். ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், ஆவடி இணை ஆணையாளர் விஜயகுமார் அறிவுறுத்தலின்படி, ஆவடி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் குற்ற தடுப்பு விழிப்புணர்வு கூட்டம், ஆவடி நேரு பஜாரில் நேற்று நடந்தது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில், நேரு பஜாரில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. இதில், பொதுமக்கள் வீட்டில் கேமரா, பாதுகாப்பு அலாரம் கருவிகள் பொருத்த வேண்டும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் ஆபத்து நேரங்களில் காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் போக்குவரத்து போலீசாரிடம் உதவி கேட்க அறிவுறுத்த வேண்டும். உங்கள் வீட்டருகே சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தென்பட்டால் உடனே காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.
காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் கையில் மொபைல் போன் எடுத்து செல்ல கூடாது. மொபைல் போனிற்கு வரும் ஓடிபி எண்ணை பகிரக்கூடாது. வீட்டை பூட்டி செல்லும் போது, தரமான பூட்டை பயன்படுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள், கழுத்தில் உள்ள நகைகளை துப்பட்டாவில் மறைத்து கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் வெளியே சென்றால் உட்புற விளக்குகளை எரிய விட வேண்டும். விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்பவர்கள், அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து செல்ல வேண்டும், உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தை, ஆவடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் ஆவடி காவல் துறையினர் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.