Thursday, June 19, 2025
Home ஆன்மிகம் ஆழ்வார் நவதிருப்பதி கருட சேவை

ஆழ்வார் நவதிருப்பதி கருட சேவை

by Lavanya

வைணவத்தில் சில மரபுச் சொற்கள் உண்டு. பெருமாள் என்றால் ராமன்தான். பெரியபெருமாள் என்றால் திருவரங்கநாதர்தான். பெரிய பெரிய பெருமாள் என்றால் நரசிம்மப் பெருமாள்தான். கோயில் என்றால் திருவரங்கம்தான். மலை என்றால் திருமலைதான். ஆழ்வார் என்றால் நம்மாழ்வார்தான். ஜீயர் என்றால் நஞ்ஜீயர்தான். பிள்ளை என்றால் நம்பிள்ளைதான். இதை ஒரு அழகான பாடலிலே மணவாள மாமுனிகள் பாடுகின்றார்.

“நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர்
அவரவர் தம் ஏற்றத்தால் – அன்புடையோர்
சாற்று திருநாமங்கள் தான் என்று நன்நெஞ்சே
ஏத்ததனைச் சொல்லி நீ இன்று’’
– (உபதேச ரத்தின மாலை)

வைணவத்தில் ஆழ்வார்கள் வரிசை நம்மாழ்வாரிடம் தொடங்கி திருமங்கை ஆழ்வாரிடம் முடியும். “பராங்குச பரகாலர்கள்” என்று இந்த வரிசையைக் கூறுவது உண்டு. இருவருக்கும் திருநகரியோடு தொடர்பு உண்டு. ஆழ்வார் அவதாரத்தலம் ஆழ்வார் திருநகரி. திருமங்கை ஆழ்வாரின் அவதார உற்சவம் கொண்டாடப்படும் தலம் திருவாலி திருநகரி. ஆழ்வார் திருநகரி திருக்குருகூர் என்று வழங்கப்படும். தாமிரபரணிக் கரையில் உள்ள திருத்தலம். இந்த தாமிரபரணிக் கரையை ஒட்டி வடகரையிலும் தென்கரையிலும் அடுத்தடுத்த திருத்தலங்களை ஒன்றாக “நவதிருப்பதிகள்” என்று அழைக்கும் மரபு உண்டு. ஆழ்வாரின் அவதார நட்சத்திரமானது வைகாசி விசாகம். இந்த வைகாசி விசாகத்துக்கு ஒப்பான ஒரு திருநாள் இல்லை என்றார் மணவாள
மாமுனிகள்.

“உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்?
உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர்? – உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு? தென்குருகைக்கு உண்டோ
ஒரு பார்தனில் ஒக்கும் ஊர்?
நம்மாழ்வார் அவதார சிறப்பு’’

நம்மாழ்வாரின் பெருமையை எளிதில் சொல்ல முடியாது. அத்தனைப் பெருமை படைத்தவர். கலி பிறந்த சில நாட்களில் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் ஆழ்வார் திருநகரிக்கு உட்பட்ட அப்பன்கோயில் என்கிற பகுதியில் காரி யாருக்கும் உடையநங்கைக்கும் திருக்குமாரராக அவதரித்தார். காரியார் மற்றும் உடையநங்கை ஆகியோரின் குடும்பங்கள் வழிவழியாக, திருமாலடியார்களாகத் தொண்டு செய்து வந்தவர்கள். வெகுகாலம் தங்களுக்கு ஒரு பிள்ளை இல்லையே என்று பெருமாளிடம் வேண்ட, அந்தப் பெருமாளே இவர்களுக்கு பிள்ளையாகப் பிறந்தார்.

கிருஷ்ண குதூகலமே (பகவான் கண்ணனின் ஆனந்த வடிவம்) நம்மாழ்வாராய் வடிவெடுத்தது என்பது ஆச்சாரியர்கள் அபிப்ராயம். இவர் அவதாரத்திற்கு சில தினங்களுக்கு முன்புதான் பகவான் கண்ணன் தன்னுடைய அவதார வைபவத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் எழுந்தருளினான். தான் சில நாட்கள் முன் பிறந்திருந்தால் கண்ணனைத் தரிசித்து இருக்கலாமே என்கின்ற உணர்வு ஆழ்வாருக்கு இருந்ததால் ‘‘ஒரு செவ்வாய் முற்படப் பெற்றிலேனே’’ என்று வருந்துவதாகச் சொல்லுவார்கள்.

ஒரு செவ்வாய் என்றால் செவ்வாய் கிரகம் ராசி மாறும் காலம். சுமார் ஒன்றரை மாத காலம் இன்று எடுத்துக் கொள்ளலாம். ஆழ்வாருக்கு பலப்பல திருநாமங்கள் உண்டு. பிறக்கும்போதே சட வாயுவை ஹூங்காரம் செய்து விரட்டியதால் சடகோபன் என்று பெயர். வகுள (மகிழ) மாலையைச் சூடிக்கொண்டு இருப்பதால் வகுளாபரணர் என்று பெயர். பிறந்ததிலிருந்து பால் உண்ணாமல், வாய் பேசாமல், சிரிக்காமல், அழாமல், யோகநிலையில், (மற்றவர்கள் நிலையிலிருந்து மாறுபட்டு இருந்ததால்) மாறன் என்று பெயர். இவர் அவதாரம் செய்த திருத்தலம் திருக்குருகூர் என்பதால், திருக்குருகூர் நம்பி என்று ஒரு திருநாமம்.

நம்முடைய ஆழ்வார் என்று பெருமாள் அபிமானத்ததால், நம்மாழ்வார் என்று திருநாமம்.இப்படி இவருடைய ஒவ்வொரு பெயருக்கும் காரணம் உண்டு. மற்ற ஆழ்வார்கள் எல்லாம் இவருக்கு அவயங்கள் என்பதால் இவரை அவயவி என்று சொல்வார்கள். அதாவது மற்ற ஆழ்வார்களை தனது அங்கங்களாக உடையவர் என்று பொருள். ஆழ்வார் களில் எப்படி இவர் தலைமை ஆழ்வாரோ, அதைப் போலவே ஆச்சாரியர்களின் வரிசையிலும் இவரை தலைமை ஆச்சாரியராக கருதுவர். காரணம், மற்ற ஆழ்வார்கள் பிரபந்தங்களையும் சேர்த்து இவர் நாத முனிக்கு அருளிச் செய்ததால் பிரபந்தஜன கூடஸ்தர் என்று போற்றுவார்கள்.

களி இருளை நீக்க வந்தவர். கலியில் மக்கள் படும் துயரங்களை போக்க வந்தவர். மக்கள் நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் ‘‘சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன் கேண்மின்’’ என்று பகவானின் பெருமையை உரக்கப் பாடியவர். இவருடைய பெருமையை இவருடைய சீடர் மதுரகவியாழ்வார் மிக அற்புதமாகப் பாடுவார்.

“சேமம் குருகையோ?
செய்ய திருப்பாற்கடலோ
நாமம் பாராங்குசமோ
நாரணமோ – தாமம்
துளவேர் வகுளமோ
தோள் இரண்டோ நான்கும்
உளவோ பெருமான் உனக்கு?’’

ஆழ்வார் வேறு, பெருமாள் வேறு அல்ல என்பதை கம்பீரமாகச் சொல்லும் பாடல் இது. இருந்த இடத்தில் இருந்தபடியே இருக்க, எல்லா திவ்ய தேசப் பெருமாளும் இவரிடம் வந்து தமிழ் பாசுரங்களைப் பெற்றதாகச் சொல்வார்கள். அவர் ஒரு புளிய மரத்தடியில் யோக நிலையில் 16 ஆண்டு காலம் இருந்தவர். இன்றும் 5000 ஆண்டுகள் பழமையான அந்தப் புளிய மரத்தை நாம் ஆழ்வார் திருநகரியில் சேவிக்கலாம். ஆழ்வாரின் அவதார வைபவத்தை அறிந்த நமக்கு, அவர் அவதரித்த திருத்தலத்தின் வைபவமும் தெரிய வேண்டுமல்லவா, அதையும் சற்று பார்ப்போம்.

நம்மாழ்வார் அவதரித்த திருத்தலத்தின் சிறப்பு

நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) ஆதிநாதன் திருக்கோயில் 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகும். இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதி நாதன் என திருப்பெயர் பெற்றார். இந்தத் திருத்தலம் புனிதமான தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பிரணவத்தில் (ஓம்காரம்) அகாரம் (பரமாத்மா) மற்றும் மகாரம் (ஜீவாத்மா) ஆகியவை சமமான முக்கியத்துவத்தைப் பெற்றது போலவே, இந்த திவ்ய தேசத்தில் பெருமாள் மற்றும் ஆழ்வார் இருவருக்கும் சமமான முக்கியத்துவம் உண்டு என்று பூர்வாச்சார்யர்கள் விளக்குகிறார்கள். முதலில் பெருமாள் பெருமையைப் பேசும் திருக்குருகூர் என்ற பெயரோடு இருந்த இந்த திவ்ய தேசம் ஆழ்வார் அவதாரச் சிறப்பால் ஆழ்வார் திருநகரி என்று மாறியது.

நம்மாழ்வார் பாடிய பிரபந்தங்களின் சிறப்பு

இனி நம்மாழ்வார் பாடிய பிரபந்தங்களின் சிறப்பைக் காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்களை அருளிச் செய்தார். முதல் பிரபந்தம் திருவிருத்தம். 100 பாசுரங்களைக் கொண்டது. “முன்னுரைத்த திருவிருத்தம் நூறு பாட்டும்” என்று ஸ்வாமி தேசிகன் பிரபந்த சாரத்தில் எடுத்துக் கூறுகின்றார். ஒருவன் கருவிருத்தக் குழியில், அதாவது திரும்பத்திரும்ப, “ஜனனம் மரணம், ஜனனம் மரணம்” என்ற சுழற்சியிலிருந்து விடுபட வேண்டும் என்று சொன்னால், சுவாமி நம்மாழ்வார் அருளிய திருவிருத்தத்தை ஒருமுறையாவது படிக்க வேண்டும். அந்தத் திருவிருத்தத்தில் ஒரு சில பாசுரங்கள் தவிர, மற்ற பாசுரங்கள் அனைத்தும் அகத்துறையில் அமைந்தவை. பக்தியில் தோய்ந்த பிரேம பாவம் அற்புதமாக வெளிப்படும் உயர்ந்த பாசுரங்கள் இந்தப் பாசுரங்கள்.

இரண்டாவது பிரபந்தம் திரு ஆசிரியம். ஏழு பாசுரங்களைக் கொண்டது. மூன்றாவது பிரபந்தம் பெரிய திருவந்தாதி. 87 பாசுரங்களைக் கொண்டது. சரம (நிறைவான) பிரபந்தம் என்று சொல்லப்படும். திருவாய்மொழி 1102 பாசுரங்களைக் கொண்டது.

திருவாய்மொழியின் சிறப்பு

திருவாய்மொழியை சாம வேதத்தின் சாரமாகச் சொல்லுவார்கள். சகல உபநிடதங்களின் திரண்ட பொருளாகத் திருவாய் மொழியைக் கொண்டாடுவார்கள். பிரம்ம சூத்திரத்திற்கு உரை செய்யும் பொழுது, வேதத்தின் சில வாக்கியங்களுக்குப் பொருள் குழப்பம் ஏற்படும் சமயங்களில், சுவாமி ராமானுஜர் திருவாய்மொழியைப் பார்த்து, சரியான பொருளைத் தெளிந்து, பயன்படுத்துவாராம். இதனை வேதாந்த தேசிகர் “தெளியாத மறை நிலங்கள் ஓதித் தெளிகின்றோமே” என்று போற்றுவார்.திருவாய்மொழியின் பெருமையை வடமொழியில் எழுதப்பட்ட தனியனில் அற்புதமாக நாதமுனிகள் விளக்குவார்.

‘`பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீ சடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ர ஸாகோப நிஷத் ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்’’
இதன் பொருள்

பக்தர்களுக்கு அமுதமாய் இருப்பது. அறிவாளிகள் அனைவராலும் கொண்டாடப்படுவது. அறிய வேண்டிய அர்த்தங்கள் அனைத்தையும் அறிவிப்பது. ஆயிரம் பாடல்கள் கொண்டது. தமிழ் வேதமாக இருப்பது. நம்மாழ்வார் அருளியது. இத்தனைப் பெருமையையும் உடைய திருவாய்மொழிக் கடலைச் சரணம் அடைகிறேன். சரி, இந்த திருவாய்மொழி எந்தக் கருத்தை வலியுறுத்துகிறது? என்ன தத்துவச் சிறப்பை விளக்குகிறது? என்பதை பராசர பட்டர் ஒரு அற்புதமான தனிப் பாசுரத்தில் விளக்குகின்றார்.

``மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ் வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழின் இசை வேதத்தியல்’’

1. மிக்க இறை நிலை – பரமாத்ம ஸ்வரூபம்.
2. மெய்யாம் உயிர் நிலை – ஜீவாத்ம ஸ்வரூபம்.
3. தக்க நெறி – உபாய சொரூபம்.
4. தடையாகித் தொக்கியலும் ஊழ் – விரோதி ஸ்வரூபம்.
5. வாழ்வினை – புருஷார்த்த சொரூபம்.

இவைதான் அர்த்த பஞ்சகம். இதன் பொருளைத் தெரிந்து கொள்வதுதான் மெய்ஞானம். சுருக்கமாகச் சொன்னால் நான் யார்?, அவன் யார்?, அவனை அடைவதற்கு என்ன வழி?, அவனை அடையாமல் தடுப்பது எது? அவனை அடைந்தால் பெரும் பயன் என்ன?, என்பதே அர்த்த பஞ்சக ஞானம். இந்த ஐந்து கேள்விகளுக்கும் சரியான விடையை நாம் தெரிந்து கொண்டோம் என்றால் அர்த்த பஞ்சக ஞானத்தைப் பெற்று விட்டோம் என்று பொருள்.

இந்த ஆன்ம ஞானத்தைப் பெற வேண்டும் என்று சொன்னால் திருவாய் மொழியின் 1102 பாசுரங்களையும் (100 பதிகங்கள்) ஒரு ஆசாரியாரிடம் கற்க வேண்டும். ‘‘அறிய கற்று வல்லார்கள்’’ என்று ஒரு பாசுரத்தில் நம்மாழ்வாரே உறுதிபடச் சொல்லுகின்றார். இப்படி ஞானத்தை அள்ளிக்கொடுத்த நம்மாழ்வாருக்கு, அவருடைய அவதார மாதமாகிய வைகாசியில், அவதார நட்சத்திரமாக விசாகத்தை ஒட்டி, அவதரித்த ஆழ்வார் திருநகரியில் திருவிழா வைபவம் நடைபெறுகிறது.

நவதிருப்பதி கருட சேவையின் சிறப்பு

ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் அவதரித்த வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு 10 நாட்கள் சீரும் சிறப்புமாக உற்சவம் நடைபெறும். உற்சவம் வைகாசி மாதம் 17-ஆம் தேதி 31.5.2025 சனிக்கிழமை அன்று தொடங்குகிறது. இதன் முதல் நிகழ்வாக திருமுளைச் சாற்று உற்சவம் நடை பெறும். ஸ்ரீ கூரத்தாழ்வான் சந்நதியில் இருந்து தேங்காய் வாங்கி, மாலையில் தேங்காய் சாற்றுதல் என்ற உற்சவம் பிரசித்தம். அடுத்த நாள் மதுரகவியாழ்வார் உற்சவம். பின் ஆழ்வார் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வாகன சேவை உலா நடைபெறும். பிரசித்தி பெற்ற நவதிருப்பதி கருடசேவை. வைகாசி மாதம் 21-ஆம் தேதி (4.6.25 புதன்கிழமை) அன்று நடைபெறும்.

சுவாமி நம்மாழ்வார் பூப்பந்தல் மண்டபத்தில் எழுந்தருளுவார். நவதிருப்பதி எம்பெருமான்களுக்கும் மதுரமான தமிழில் மங்களாசாசனம் நடைபெறும். இது பார்க்கப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அன்று இரவு மதுரகவி ஆழ்வார் முன்செல்ல, ஸ்ரீ நம்மாழ்வார் அம்ச வாகனத்தில் எழுந்தருள, 9 எம்பெருமான்களும் கருட வாகனத்தில் ஆரோகணித்த கருட சேவை உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறும். ஆழ்வாரின் நான்கு பிரபந்தங்களும் ஆறு அங்கங்களாக ஆறு பிரபந்தம் அருளிச்செய்த ஆழ்வாரான திருமங்கை ஆழ்வாருக்கும் இதைப் போன்றதொரு வைபவம் சீர்காழிக்கு பக்கத்தில் திருநாங்கூர் என்ற திவ்யதேசத்தில் ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு மறுநாள் நடைபெறும்.

இந்த மங்களாசாசன உற்சவத்திற்காக ஆயிரக்கணக்கான அன்பர்கள் கூடியிருப்பார்கள். ததீயாராதனம், வைணவ மாநாடுகள், கருத்தரங்கங்கள், இசைக் கச்சேரிகள் என ஆழ்வார் திருநகரியே கோலாகலமாக இருக்கும். ஒன்பதாம் நாள் விழாவாக திருத்தேர் உற்சவம் நடைபெறும். ஆழ்வாரின் அவதார தினம் விசாகம், வைகாசி மாதம் 26-ஆம் தேதி, 9.6.2025 திங்கட்கிழமை நடைபெறும்.

விசாகம் நட்சத்திரம் குருவுக்குரிய நட்சத்திரம். ஆசாரியனுக்கு உரிய நட்சத்திரம். வைணவத்தின் பிரதம ஆச்சாரியன், நம்மாழ்வார் அல்லவா. எல்லா ஆழ்வார்களும் பெருமாளின் மீது பிரபந்தம் பாடினார்கள். ஆனால், மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரின் மீது பிரபந்தம் பாடினார். மதுரகவி ஆழ்வாரே தம்முடைய குருவாகக் கருதிய ஆழ்வார் நம்மாழ்வார்.

அவருடைய பெருமைக்கும் அவர் அவதரித்த வைகாசி விசாகத்திற்கும் இணையாக வேறு ஒன்றைச் சொல்ல முடியாது. வைகாசி விசாகத்தில் நம்மாழ்வாரின் திருவடி வாரத்தில் சரணடைவோம். இதைத்தான் ராமானுஜரும், “பூ மன்னு மாது பொருந்திய மார்பன், புகழ் மலிந்த பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன்” என்ற ராமானுஜ நூற்றந்தாதிப் பாசுரத்தால் நமக்குக் காட்டினார்.

முனைவர் ஸ்ரீ ராம்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi