பொள்ளாச்சி, ஆக. 6: கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியாருக்கு உள்ளூர் சுற்றுவட்டார பகுதியிலிருந்தும் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், பழனி, கேரளா உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும். ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருகே உள்ள கவியருவிக்கு செல்வதுடன், வால்பாறை செல்லும் மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி காட்சி முனைப்பகுதியில் நின்று இயற்கை அழகை ரசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டில் கோடை மழைக்கு பிறகு தென்மேற்கு பருவமழையானது தொடர்ந்து பல வாரமாக பெய்துள்ளது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் பருவமழையால், வனப்பகுதி முழுவதும் செழித்துள்ளது. மேலும், எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என காணப்படுகிறது. மேலும், ஆழியார் வரும் சுற்றுலா பயணிகளில் பலர் வால்பாறை மலைப்பாதையில் பயணம் மேற்கொண்டு இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர்.