Tuesday, June 6, 2023
Home » ஆளுநரால் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றம்: தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம்; அனைத்து கட்சிகளும் ஒருமித்த ஆதரவு

ஆளுநரால் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றம்: தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம்; அனைத்து கட்சிகளும் ஒருமித்த ஆதரவு

by

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியால், திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் கொண்டு வரப்பட்டு, அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா கவர்னர் ரவிக்கு விரைவில் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று, தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுக்களை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டமுன்வடிவு, 2022-ஐ, மறுஆய்வு செய்திடக்கோரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மிகவும் கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் நின்று கொண்டு இருக்கிறேன். இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதிகப்படியான பணத்தை இழந்ததன் காரணமாக மனமுடைந்து, இதுவரை 41 பேர் தற்கொலை செய்து கொண்ட துயரமான நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதே என்ற வேதனையோடுதான் எனது உரையை நான் தொடங்குகிறேன். சென்னையை சேர்ந்த சுரேஷ்குமார் என்ற இளைஞர், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 17 லட்சம் ரூபாய் வரை இழந்து, அந்த கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். அவர் மரணத்துக்கு முன் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டு, இறந்து போயிருக்கிறார். ‘தயவு செய்து ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள்; என்னைப்போல் பலரும் தங்களது குடும்பத்தை அனாதையாக விட்டுவிட்டு செல்லக் கூடாது. இத்தகைய நிலை யாருக்கும் வரக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவரான சென்னையை சேர்ந்த வினோத்குமார், ‘எனது தற்கொலையே கடைசி தற்கொலையாக இருக்கட்டும்’ என்று எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்துள்ளார். நாளுக்கு நாள் இந்த மரணங்கள், நம்முடைய கண்ணுக்கு முன்னால் நடக்கின்றன.  எனவே, தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு அரசின் சார்பில் அமைத்தோம். இக்குழு 27-6-2022 அன்று தனது அறிக்கைகளை என்னிடம் வழங்கியது. அது அமைச்சரவை குழுவின் பார்வைக்காக வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வி துறை, ஜூலை 2022-ல் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் உள்ள 2,04,114 அரசு பள்ளி ஆசிரியர்களிடம் கருத்து கோரப்பட்டது. மாணவர்களின் ஒருமுகப்படுத்தும் திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 74 சதவீதம் ஆசிரியர்கள் சொன்னார்கள். மாணவர்களின் நுண்ணறிவு ஈவு, எழுதும் திறன் மற்றும் படைப்பாற்றலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக 64 சதவீதம் ஆசிரியர்கள் சொன்னார்கள். மாணவர்களின் தன்மதிப்பு திறன் குறைவது கோபத்தை வெளிப்படுத்து, ஒழுக்க குறைபாடு இருப்பதாகவும் 75 சதவீதத்திற்கும் மேலான ஆசிரியர்கள் சொன்னார்கள். இணையதள விளையாட்டை தடுப்பது தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மனநல ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள், இணையவழி விளையாட்டு தொழில் நிறுவனர்கள் ஆகியோரிடம் 7-8-2022 அன்று கருத்துகள் கேட்கப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து 10,735 மின்னஞ்சல்கள் பெறப்பட்டன. அதில், 10,708 மின்னஞ்சல்களில், இணையதள சூதாட்டத்தையும், இணையதள ரம்மி விளையாட்டையும் தடை செய்வதற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 மின்னஞ்சல்களில் மட்டுமே எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதள விளையாட்டு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக சிந்தனையாளர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோருடன் 11-8-2022 மற்றும் 12-8-2022 ஆகிய நாட்களில், உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் நடத்தி, கருத்துகள் பெறப்பட்டன. இதன் அடிப்படையில் ஒரு வரைவு அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு 26-9-2022 அன்று அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் அவசரச் சட்டம், 2022, ஆளுநரால் அக்டோபர் 1, 2022 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது. இது தமிழ்நாடு அரசின் அரசிதழில் அக்டோபர் 3, 2022-ல் வெளியிடப்பட்டது. அதன்பிறகு, மேற்கண்ட அவசர சட்டத்துக்கு பதிலாக, ஒரு சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டது. அதற்கு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவு, 2022 என்று பெயர். தமிழ்நாடு சட்டமுன்வடிவு எண்.53/2022 என்ற இந்த சட்டமானது கடந்த 19-10-2022 அன்று சட்டப்பேரவையில் உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக 26-10-2022 அன்று சட்டத்துறையால் அனுப்பப்பட்டது. இதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் 23-11-2022 அன்று சில விளக்கங்களை கேட்டிருந்தார். இதையடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் உரிய விளக்கம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்ட அமைச்சரும் மீண்டும் விளக்கத்தை அளித்தார். ஆனால், சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை 131 நாட்கள் கழித்து, சில குறிப்புகளுடன் 6-3-2023 அன்று சட்டப்பேரவை தலைவருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநர் எழுப்பியுள்ள கேள்விகளும், அதற்கான பதில்களும் அமைச்சரவை கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு, சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் பரிசீலனைக்கு வைக்கும் கருத்துருவானது அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.இதனைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவானது உறுப்பினர்களின் பார்வைக்கு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இதனை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இந்த சட்டம் அறிவால் மட்டுமல்ல, இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். அரசியல் காரணங்களில், கொள்கைகளில் நமக்குள் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம், அப்படி எழுவது இயற்கையானதுதான். ஆனால், மனித உயிர்களை பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதில் இதயமுள்ளவர்கள் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. ‘எனது மரணம் கடைசியாக இருக்கட்டும்’ என்ற சோகக் குரலும், ‘என் குடும்பத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னொரு குடும்பத்துக்கு ஏற்படக் கூடாது’ என்ற அழுகுரலும் இனியொரு முறை இந்த மாநிலத்திலும் எழக்கூடாது. எழுமானால், சட்டத்தின் பொருளும் மாநிலத்தின் அதிகாரமும் நீர்த்துப் போனதன் அடையாளமாக ஆகிவிடும். சட்டம் ஒழுங்கை பேணுவதும், மக்களை பாதுகாப்பதும், குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதும், குற்றவாளிகளிடம் இருந்தும் மக்களை காப்பதும் மாநில அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமையாகும். மாநிலத்தின் ஆளுகை எல்லைக்குள் உள்ள மக்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்தவும், காக்கவும் மாநில அரசுக்கு உரிமை உண்டு, மீண்டும் சொல்கிறேன் – மாநில அரசுக்கு அந்த உரிமை உண்டு. ஒன்றிய தகவல் ஒலிபரப்பு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு, 21-3-2023 அன்று பதில் அளிக்கையில், பந்தயம் மற்றும் சூதாட்டமானது, அரசியல் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள மாநில அதிகார பட்டியலின் 34வது பிரிவில் இடம் பெற்றுள்ளதால் இது தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறதென்று மிகத் தெளிவாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார். மனச்சாட்சியை உறங்கச் செய்து விட்டு, எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்பதை பிரகடனமாகவே இந்த மாமன்றத்தில் தெரிவிக்க நான் விரும்புகிறேன். எந்த சட்டத்தின் நோக்கமும் மக்கள் நலன் மட்டும்தான். மக்களை காப்பது ஒன்றே சட்டத்தினுடைய கடமை ஆகும். சட்டவியல் என்பதே, சமூக அறிவியல் தான் என்பதை உலகம் முழுவதும் இருக்கும் சட்டமேதைகள் ஒப்புக் கொள்வார்கள். பயன்பாட்டில் நீதி என்பது, அற நீதி என்றும் சட்ட நீதி என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே நீதிநெறி, ஒழுக்க விதிகளை காப்பாற்றவே சட்டநீதியை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவு, 2022 இம்மாமன்ற உறுப்பினர்கள் முன் வைக்கப்படுகிறது. இனியொரு உயிர் பறிக்கப்படாமல்; இனியொரு குடும்பம் நடுத்தெருவில் நிற்காமல்; இனியொரு நாள்கூட இந்த ஆன்லைன் அநியாயம் தொடராமல் இருக்க அனைத்து உறுப்பினர்களும் இந்த சட்ட முன்வடிவை ஆதரிக்க வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.இதைத்தொடர்ந்து சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது, ‘‘19-10-2022ம் நாளன்று சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பெற்று, ஆளுநரால் 6.3.2023ம் நாளன்று திருப்பி அனுப்பப்பெற்ற 2022ம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டமுன்வடிவு (சட்டமன்ற பேரவை சட்டமுன்வடிவு எண்.53/2022) மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, மீண்டும் நிறைவேற்றப்பட வேண்டும்’’ என்றார்.இந்த மசோதாவை ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக), தளவாய்சுந்தரம் (அதிமுக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜ), ஷாநவாஸ் (விசிக), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூ.), மாரிமுத்து (இந்திய கம்யூ.), சதன்திருமலைக்குமார் (மதிமுக), ஜவாஹிருல்லா (மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக) உள்ளிட்ட அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் ஆதரித்து பேசினர். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அனைத்துக்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா உடனடியாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மனசாட்சியை உறங்கச் செய்து விட்டு, எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்பதை பிரகடனமாகவே இந்த மாமன்றத்தில் தெரிவிக்க நான் விரும்புகிறேன். * ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை 41 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.* ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு தமிழ்நாடு அரசிடம் அறிக்கை அளித்தது….

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi