திருச்செந்தூர், ஆக. 30: ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக் கெபி பெருவிழா, இன்று நடக்கிறது. திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக் கெபியின் 96வது ஆண்டு பெருவிழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் திருப்பலி, மறையுரை நடந்து வருகிறது. 9ம் நாளை முன்னிட்டு நேற்று மாலை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோனி தலைமையில் திருப்பலி நடந்தது. தொடர்ந்து இரவு சப்பர பவனி நடந்தது. இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர்.
இன்று (30ம் தேதி) காலை 5.15 மணிக்கு தூத்துக்குடி நற்செய்தி நடுவம் குமார்ராஜா தலைமையில் திருப்பலி, காலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோனி தலைமையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது. பகல் 11 மணிக்கு மறைமாவட்ட முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஆலந்தலை பங்குதந்தை சில்வெஸ்டர், உதவி பங்குதந்தை ஜோதிமணி, அருட்சகோதரிகள், ஊர் நலக்கமிட்டியினர், திருத்தல நிதிக்குழுவினர், ரொசாரி மாதா சபையினர், விழா குழுவினர், பக்த சபையினர் மற்றும் இறைமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.