பாடாலூர், செப்.6: ஒரு நல்ல ஆசிரியராக வாழ்ந்து, ஜனாதிபதி பதவி வரை உயர்ந்து மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
பாடாலூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அலங்கரிக்கப்பட்டிருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மாணவ-மாணவிகள் பாடம் நடத்த வந்த ஆசிரியர்களை வரவேற்று, அவர்களுக்கு இனிப்பு கொடுத்தனர். இதில் பள்ளி தலைமையாசிரியர் மாலதி, பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஓவிய ஆசிரியர் வேல்முருகன் டாக்டர்.ராதாகிருஷ்ணன் படத்தை தத்ரூபமாக வரைந்து மாணவர்களுக்கு காட்சிப்படுத்தினார்.