புதுக்கோட்டை, ஜூலை 5: ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான ஆறு நாட்கள் புத்தொளிப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பயிற்சியில், ஐந்தாம் நாளில் மாணவ மாணவிகளுக்கு போக்சோ, மனித உரிமை மற்றும் கேலிவதை போன்ற சட்ட விழிப்புணர்வு வழங்கப்பட்டது. தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி மாணாக்கர்களுக்கான புத்தொளிப்பயிற்சி கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்றுவருகிறது. இதில், 4 ஆலங்குடி வட்ட சட்டப்பணிகள் குழுவால் ஒருங்கிணைக்கப்பட்ட ஆலங்குடி நீதிமன்ற பேனல் அட்வகேட் மாலதி மனித உரிமைகள் மற்றும் கேலிவதை குறித்த சட்ட வரைவுகளை விளக்கி மாணவர்களுக்கு சிறந்த அறிவுரைகளை எடுத்துரைத்தார்.
மேலும், வனஜா மாணவ மாணவிகளுக்கு போக்சோ சட்டத்தின் சிறப்புகள் மற்றும் அதுகுறித்த விழிப்புணர்வை திறம்பட எடுத்துரைத்தார். இவ்விழாவிற்கு, கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜானகி தலைமை தாங்கி மாணவர்களுக்கு புத்தொளிப் பயிற்சியின் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், கணிதவியல் துறைத் தலைவர் முனைவர் அர்ச்சுனன் வாழ்த்துரையும் ஆங்கிலத்துறைத் தலைவர்மணிகண்டன் அறிமுகவுரையும், வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் பார்வதி வரவேற்புரையும் வழங்கினார். மேலும், இவ்விழாவிற்கு ஆலங்குடி வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ சட்டப் பணியாளர் செந்தில்ராஜா கலந்துகொண்டு கேலிவதை மற்றும் சட்ட உதவி சார்ந்த துண்டுப் பிரச்சுரங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.