நாமக்கல், ஆக.10: ஆறு, குளங்களில் கழிவுநீரை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய நகராட்சிகளில், கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டுநர்கள், பணியாளர்களுக்கான பயிற்சி முகாம், நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு நகர்மன்ற தலைவர் கலாநிதி தலைமை வகித்தார். பொறியாளர் சண்முகம் முன்னிலை வகித்து பேசினார்.
பயிற்சி முகாமை தொடங்கி வைத்து, ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் பேசியதாவது: மனித கழிவுகளை மனிதனே அகற்றுதல் தடை சட்டப்படி கசடு, கழிவுநீர் அகற்றும் உரிமையாளர்கள், தங்களிடம் பணியாற்றும் பணியாளர்கள் இயந்திரம் மூலம் செப்டிக் டேங்க் சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். பணியாளர்கள் செப்டிக் டேங்கில் இறங்கி சுத்தம் செய்வது, முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். நகராட்சி மூலம் வழங்கப்பட்ட உரிமத்தை நன்கு தெரியும்படி, வாகனத்தின் முகப்பில் பொருத்தி வைக்க வேண்டும். வாகன போக்குவரத்தை கண்காணிக்கும் ஜிபிஎஸ் கருவியை, எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.
செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனம், நன்றாக வேலை செய்யக்கூடிய நிலையில் பராமரிக்க வேண்டும். கழிவுநீரை சேகரிக்கும் இடத்திலும், ஏற்றி சொல்லும் போதும், அப்புறப்படுத்தும் போதும், சிறிதளவு கசிவு இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து எடுத்து செல்லப்படும் கழிவுநீரை ஆறுகள், குளம், கழிவுநீர் வடிகால்கள், திறந்த வெளி இடங்கள், பாதாள சாக்கடை தொட்டிகள் ஆகியவற்றில் கொட்ட கூடாது. மீறி செயல்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். கழிவுகள் மற்றும் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே கொட்ட வேண்டும்.
பணியாளர்கள் பாதாள சாக்கடை அடைப்பு மற்றும் செரிமான தொட்டிக்கு உள்ளே நுழைவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். உரிமம் பெறாத வாகனங்கள் நகராட்சி பகுதிகளில் இயங்கினால் அவை பறிமுதல் செய்யப்படும். இதுபற்றி பொதுமக்கள் நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு ஆணையாளர் சென்னு கிருஷ்ணன் தெரிவித்தார்.
பயிற்சி வகுப்பில், பணியின் போது பாதுகாப்பு உபரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும், பணியாளர்கள் ஆபத்தில் இருக்கும் போது, மேற்கொள்ள வேண்டிய முதலுதவி குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், உதவி மையம் எண் 14420 பயன்படுத்துவது குறித்தும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இம்முகாமில், துப்புரவு அலுவலர்கள் திருமூர்த்தி, ராமமூர்த்தி, செல்வராஜ், கழிவுநீர் மேலாண்மை நிபுணர் ஜெகதீஷ், துப்புரவு ஆய்வாளர்கள் பழனிசாமி, பாஸ்கர், செல்வகுமார் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செப்டிக் டேங்க் வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.