ஆறுமுகநேரி, ஜூன் 23: ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாதசுவாமி கோயிலில் ஆனி உத்திரப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைமுன்னிட்டு நேற்று முன்தினம் கணபதி ஹோமம், மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளல், மாலையில் நால்வர் சுவாமிகளின் புறப்பாடு, தேவார திருமுறை பாராயணனம், காப்பு கட்டுதல் நடந்தது. நேற்று கொடியேற்றத்தை தொடர்ந்து அதிகாலை கும்ப பூஜை மற்றும் ஹோமம் நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. பின்னர் கொடியேற்றம் நடந்தது.
இதையொட்டி கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. பூஜைகளை சுரேஷ் பட்டர், விக்னேஷ் சிவம், விஜய்பட்டர் ஆகியோர் நடத்தினர். ஓதுவார்கள் சங்கர நயினார், ரத்னசபாபதி திருமுறை பாராயணம் நடத்தினர். நிகழ்ச்சியில் கோயில் மணியம் சுப்பையா, பக்த ஜன சபை அரிகிருஷ்ணன், சைவ வேளாளர் சங்க மாவட்டத் தலைவர் சங்கரலிங்கம், தங்கமணி, அதிமுக முன்னாள் நகர செயலாளர் அமிர்தராஜ், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், ஓய்வு பெற்ற பேராசிரியர் அசோக்குமார், தவமணி மற்றும் பன்னிரு திருமுறை மகளிர் குழுவினர் பங்கேற்றனர்.
மாலையில் திருநாவுக்கரசர் சுவாமிகள் உழவாரப்பவனி மற்றும் திருவீதி உலா நடந்தது. இரவு யாகசாலை பூஜை மற்றும் பெலிநாயகர் அஸ்திரத் தேவருடன் திருவீதி உலா நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் காலை, இரவில் சுவாமி அம்பாள் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி கோயில் பிரகாரங்களில் வலம் வருதல் நடைபெறும். வரும் 28ம்தேதி 7ம் திருவிழா சிவப்பு சாத்தியும், 29ம்தேதி 8ம் திருவிழா பச்சை சாத்தி வீதிஉலாவும் நடைபெறும். ஜூலை 1ம்தேதி 10ம் திருவிழாவன்று சுவாமி, அம்பாள் சப்தவர்ணகாட்சியாக ரிஷபவாகனத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது.ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனத்தார், பக்தர்கள் மற்றும் மண்டகப்படி உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.