Wednesday, May 31, 2023
Home » ஆறுமுகத்தானின் அபூர்வ வடிவங்கள்

ஆறுமுகத்தானின் அபூர்வ வடிவங்கள்

by kannappan
Published: Last Updated on

ஆடிகிருத்திகை 2.8.2021* அழகன் திருமுருகப் பெருமானின் திரு உருவை வருணித்து ஆதிசங்கரர் தமது சுப்பிர மணிய புஜங்கத்திலும், அருணகிரிநாதர் தம் திருப்புகழிலும், குமரகுருபர சுவாமிகள் கந்தர் கலிவெண்பாவிலும், பாம்பன் சுவாமிகள் சண்முகக்கவச நூலிலும், திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள் திருப்போரூர் சந்நதி முறையிலும், அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் தம் திருவருட்பாவிலும், கந்த சஷ்டி கவசம் தந்தருளிய தேவராய சுவாமிகளும் அற்புதமாகப் பாடி அருளியுள்ளார்கள்!* எங்கும்  நிறைந்தவன் முருகன்! இயற்கையின் எழில் வடிவம் எல்லாம் அவன் உருவமே! அழகுடன் விளங்குபவை எல்லாம் ஆறுமுகனின் தோற்றமே! ஆலயங்கள் தோறும் அருளாட்சி புரியும் அழகன் முருகனின் அபூர்வ வடிவங்களைக் கண்டு தரிசிப்போம் வாருங்கள்! பல நூற்றாண்டுகள் பழமையான சரித்திரப்பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு மலைமீது உள்ள செங்கோட்டு வேலவன் கையிலிருப்பது கல்லால் ஆன வேல் ஆகும். இது முருகப் பெருமானது தலைக்கு மேலே உள்ள கிரீடத்திற்கு மேல் 3 அங்குலம் நீட்டிக்கொண்டிருக்கிற அற்புதத்தைக் காணலாம். இவ்வேல் முருகனின் உடம்போடு ஒட்டிக்கொண்டிருக்கும். எனவே இதைக் குறைக்கவும் முடியாது உடைக்கவும் முடியாது.* திருமுருகப் பெருமான் பஞ்சலிங்கங்களைப் பூஜித்த தலம் திருச்சீரலைவாய் எனும் திருச்செந்தூர் ஆகும். அருள்மிகு செந்தில் ஆண்டவருக்குப் பின்னால் ஐந்து சிவலிங்கத் திருமேனிகளைக் காணலாம். கருவறையில் முருகன் கைகளில் மலர், தண்டம் மற்றும் ஜெப மாலையுடன் காட்சி தருகிறார்.* தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடு திருப்பரங்குன்றம். இங்குதான் முருகன் தெய்வானையைத் திருமணம் செய்து கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. இக்கோயிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அறுபடை வீடுகளில் இங்கு மட்டுமே முருகன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இங்கு முருகனின் வேலுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுவது மற்றொரு சிறப்பு.* திருச்செந்தூர் திருத்தலத்தில் முருகன் தனது திருக்கரத்தில் தாமரை மலரோடு சிவபெருமானைப் பூஜை செய்யும் வண்ணம், ஒரு கரத்தில் ஜெபமாலை, மற்றொரு கரத்தில் சக்தி ஹஸ்தம், இன்னொரு கரத்தில் தாமரை மலர் இவற்றுடன் தவக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.* பழனி, திரு ஆவினன்குடி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் பெயர் குழந்தை வேலாயுதசுவாமி கோயில் ஆகும். இந்த இடத்தின் பெயர் திரு ஆவினன்குடியாகும். இங்கே முருகன் குழந்தையாக மயில்மீது அமர்ந்து நெல்லிமர நிழலில் கோயில் கொண்டுள்ளார். மலை உச்சியில் முருகன் ராஜ அலங்காரத்தில் ஓர் அரசரைப் போல உயரமான கருவறையில் காட்சி தருகிறார்.* கும்பகோணம் – சுவாமிமலையில், சுவாமிநாத சுவாமியின் சந்நிதிக்கு எதிராக மயிலுக்கு பதிலாக யானை வாகனம் உள்ளது. இது தேவேந்திரன் அளித்தது என்பது ஐதீகம். கருவறையில் முருகன் வலக்கரத்தில் தண்டம் ஏந்தியபடி ஊறு முத்திரையில் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார்.* திருத்தணிகையில் தன் இச்சா சக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிதே வீற்றிருந்து அருள்கிறார். ‘குன்று தோறாடல்’ என்பது முருகன் எழுந்தருளி விளங்கும் மலைத் தலங்கள் எல்லாவற்றையும் குறிக்குமாயினும், அது திருத்தணிகைத் தலத்தையே தனிச்சிறப்பாகக் குறிக்கிறது எனத் தமிழ் அறிஞர்கள் கருதுகின்றனர்.* சிலம்பாறு எனப்படும் நூபுர கங்கையில் பழந்தமிழர் முருகனை வேல் வடிவமாக வழிபட்ட தொன்மை வாய்ந்த திருத்தலம் பழமுதிர் சோலை. இங்குதான் முருகன் மாட்டுக்கார வேலனாக வந்து காட்சி தந்தாராம், அவ்வைப் பாட்டிக்கு!* திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ‘இரண்டு அடுக்கு’ கோயில் ஆகும். மலையில் அடர் வனத்துக்கு மத்தியில் அமைந்த கோயிலில் காலப்போக்கில் மூலவர் சிலை சிதைவானது. கோயிலும் சேதமடைந்திருந்தது. வேறொரு சிலை செய்யப்பட்டது. ஆனால் பழைய சிலையை அகற்ற முடியவில்லை. அந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டு, அதற்கு மேல் புதிதாக ஒரு கோயிலைக் கட்டி புதிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தனர். இவ்வாறு கீழே ஒரு முருகன் மேலே ஒரு முருகன் என இரண்டடுக்காக இக்கோயில் அமைந்திருக்கிறது. பிரதான மூலஸ்தானத்தில் அற்புதக் கோலம் கொண்ட முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம் கீழ் அடுக்கில் உள்ள ஆதிமுருகன் மீது விழும்படியாக இந்த சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கே முருகன் பாலகனாக வலது கையில் தண்டம் ஏந்தி இடக்கையை இடுப்பில் வைத்தபடி காட்சி தருகிறார். இங்கே இவருக்கு எப்போதும் ராஜ அலங்காரம் மட்டுமே செய்கிறார்கள்.* சென்னை – கோடம்பாக்கம் வடபழனி ஆண்டவர் கோயிலில் மூலவர் பாத காலணிகளுடன் அருள்புரிகிறார். பாத காலணிகள் அணிந்திருப்பது ஆணவத்தையும் அகங்காரத்தையும் அடியோடு நீக்குவதைக் குறிக்கிறது. மூலவரின் வலது காலானது சற்று முன் வந்ததுபோல் காணப்படுவது பக்தர்களின் குறைகளை விரைந்து வந்து நீக்குவதாக ஐதீகம். இத்தலத்தின் சிறப்பு வேறுஎந்த படை வீட்டிலும் காண முடியாதது.* எட்டுக்குடி முருகன் கோயில் சிவனடியார்க்கும், முருகனடியார்க்கும் ஆரா இன்ப அருளமுது பாலிக்கும் அருந்தலம் ஆகும். கந்தபுராணத்தில் கூறியுள்ளபடி இங்கு முருகன் சூரபத்மனை அழிப்பதற்கு முன்பாகத் தேவேந்திரனாகிய  மயில்மீது ஏறி அமர்ந்து அம்பறாத்தூணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் உள்ள வீர சௌந்தர்யம் உடையவராக வீற்றிருக்கும் வேலாயுதக் கடவுள்தான் இங்கு மூலவராக உள்ளார். இங்கு முருகன் மிகவும் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பாலாபிஷேகம் செய்த வண்ணம் இருக்கிறார்கள்.* சேலம் நகருக்கு அருகில் மலைப்பாங்கான இடத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உடையாபட்டி கந்தாஸ்ரமம் அமைந்துள்ளது. இங்கு முருகப்பெருமானும் அன்னை பார்வதியும் எதிரெதிர் சந்நதியில்  இருப்பதை இங்குத் தவிர வேறெங்கும் காணமுடியாது. அம்பாள் உயிராகவும், முருகன் அறிவாகவும் அருள்பாலிப்பதாக ஐதீகம். இங்கே மற்றொரு அதிசயமாக முருகனைச் சுற்றி மனைவியருடன் சேர்ந்த நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்துள்ளனர்.* காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற கந்தசாமி திருக்கோயில். இக்கோயிலில் கந்தசாமி சுயம்பு மூர்த்தியாக இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக ‘சுப்பிரமணியர் யந்திரம்’ பிரதிஷ்டை செய்துள்ளனர். முருகனுக்கு பூஜை நடந்த பின், இந்த யந்திரத்திற்கு பூஜை நடக்கும். வாய்மீது கைவைத்துள்ள சிவனின் மடியில் அமர்ந்து உபதேசம் செய்யும் முருகன் சிலையும், கையில் வில்லேந்தி,  மயில் மேல் காலை வைத்தபடி சம்ஹார முத்துக்குமார சுவாமி சிலையும் இங்கே உள்ளன.* தொண்டை நாட்டில் கமண்டல நதிக்கரையில் மிகவும் புகழ் பெற்ற தலம் குண்டலீபுரம். இங்குள்ள ரேணுகாதேவி ஆலயத்தில் வடக்குப்புறம் பார்த்து தோகை விரிக்காமல் நிற்கும் மயிலின் மீது வள்ளி நாயகன் முருகப் பெருமான் நின்றபடி காட்சியளிப்பது வியப்பானது. இங்கு போகர்பிரதிஷ்டை செய்த வீரவேலுக்குத்தான் அபிஷேக, ஆராதனை, நைவேத்திய உபசாரங்கள் எல்லாம் நடைபெறுகிறது.* ஈரோடு  மாவட்டம் கோபிக்கு அருகில் உள்ள பச்சை மலை முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு 41 அடி உயரமும், 12 அடி அகலமும் கொண்ட மிகப் பிரமாண்டமான முருகன் சிலை உள்ளது. சுமார் 1600 அடி உயரம் கொண்ட மலையின் மீது இந்த முருகன் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே மிகப் பெரிய முருகன் சிலை இது என்று கூறப்படுகிறது.* திருச்சிக்கு அருகில் 30 கல் தொலைவில் உள்ளது. செட்டிக்குளம் முருகன் கோயில். வடபழனி என்று அழைக்கப்படும் சிறுகுன்றின்மீது கோவணாண்டியாகக் கரும்பினை வில்லாக ஏற்று நிற்கும் அழகன் முருகனை இங்கு தவிர வேறு எங்குமே காண முடியாது.* கழுகுமலையில் உள்ள முருகன் கோயில் மிகவும் பழமையானது. இங்குள்ள முருகப் பெருமான் இடப்பக்கமாக திரும்பி நிற்க, இடது பக்கமாகத் திரும்பி நின்ற நிலையில் இருக்கும் மயில் வாகனத்தில் கம்பீரமாக ஆறு கைகளுடன் மேற்கு முகமாக பக்தர்களுக்கு காட்சியளிப்பது அபூர்வமான திருக்கோலம்.* கடலூர் மாவட்டம், விருத்தாசலத்துக்கு அருகில் உள்ள மணவாளநல்லூரில் கொளஞ்சியப்பர் ஆலயம் உள்ளது. இத்தலத்தில் வழக்கத்திற்கு மாறாக முற்றிலும் மாறுபட்டு ‘பலி பீடம்’ ஒன்றின் வடிவில் முருகன் மூலவராக எழுந்தருளியுள்ளார். அவரே கொளஞ்சியப்பர் எனப்படுகிறார். மணிமுத்தாறு நதிக்கரையில், மணவாள நல்லூரில் பலிபீட வடிவிலே காட்சி தரும் இந்த பால முருகன் மிகுந்த வரப்பிரசாதி. தீராத வியாதிகளைத் தீர்த்து வைப்பவர்என்கின்றனர்.* ஈரோடு மாவட்டம் காங்கேயத்துக்கு அருகில் உள்ளது சிவன் மலை. இங்கு கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் முருகன் பெயர் ‘‘அன்னதான சிவாசல சுப்பிரமணிய சுவாமி’’ என்ற திருநாமம் கொண்டு எழில் வடிவில் உள்ள வள்ளியம்மையுடன் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கிறார். சிவவாக்கியருக்கு முருகன் அருள்பாலித்ததால் சிவன்மலை எனப் பெயர் பெற்றது.நெய்வேலி அருகே அமைந்துள்ளது, வேலுடையான்பட்டு முருகன் கோயில். இது கிழக்கு நோக்கி உள்ளது. கொடிமரத்துக்கு முன்பாக ஏழு வேல்கள் பெரிய அளவில் நடப்பட்டிருக்கின்றன. கருவறையின் இருபுறங்களிலும் 8 அடி உயரமுள்ள துவாரபாலகர்கள் உள்ளனர்.மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் கையில் வில்லும் அம்பும் ஏந்த பாதங்கள் இறகு அணிந்து ஒரு வேடன் போல் அருள்பாலிக்கிறார். இந்த மூலஸ்தான சிற்பம் அற்புதமாக ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது என்பது சிறப்பம்சமாகும். பக்தர்கள் கோயிலில் காணிக்கையாக பாதக்குறடுகள் செலுத்தும் பழக்கம் உள்ளது.* மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள பொன்னூரில் ஆபத்சகாலேஸ்வரர் கோயிலில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக இரண்டு கரங்களுடன் அழகாகக் காட்சி தருகிறார். இவரது காதுகளில் வட்ட வடிவமான பெரிய அளவில் கம்மலுடன் (தோடு) தோற்றமளிப்பது வித்தியாசமான தரிசனம்கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் அதிசயமாக ஆறுமுகங்களுடன் ஆறு கரங்களுடன் அருளாட்சி புரிகிறார்.                     டி.எம். இரத்தினவேல்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi