செம்பனார்கோயில், ஜூன் 3: ஆறுகோயில் பகுதியில் மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மக்காச்சோளம் மக்களின் உணவு பொருளாகவும் கால்நடைக்கு தீவனமாகவும் உள்ளதால் அதன் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்காச்சோளம் பயிரானது வருடம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும் ஆடி, புரட்டாசி மற்றும் தை பட்டங்களில் விதைப்பினை மேற்கொள்வது பயிர்கள் செழித்து வளர்வதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே ஆறுபாதி பகுதியில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தனர். தற்போது மக்காசோளம் காய் காய்த்து அறுவடைக்கு தயாராகி உள்ளது. சில பகுதிகளில் மக்காசோளத்தை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகள் கூறியதாவது: நல்ல தரமான பூச்சி மற்றும் நோய் தாக்காத விதைகளையே விதைப்பிற்கு தேர்ந்தெடுக்க வேண்டும். விதை நேர்த்தி செய்து விதைத்தால் விதைப்புத்திறன் அதிகரிக்கும். நிலத்தை நன்கு புழுதிபட உழவு செய்து, கடைசி உழவுக்கு முன் தொழு உரம் இடுதல் வேண்டும். பின்னர் பார்கள் அமைத்து, தேர்வு செய்யப்பட்ட விதைகளை பார்களில் விதைக்க வேண்டும். நடவு செய்த 12 முதல் 15 நாட்களுக்குள் பயிர்களை களைதல் வேண்டும். மக்காச்சோளம் பயிரானது அதிக வறட்சியையும், நீரையும் தாங்கி வளராது. எனவே பயிரின் வளர் நிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப நீர் பாய்ச்சல் அவசியம். குறிப்பாக, பயிரின் முக்கிய வளர் நிலையான 45முதல் 65 நாட்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதன் மூலம் அதிக விளைச்சலை பெறலாம். தற்போது சுமார் இரண்டு மாத பயிரான மக்காச்சோளத்தில் பூ பூத்து கதிர் வந்துள்ளது. நன்கு காய் காய்த்த பின்னர் மக்காச்சோளத்தை அறுவடை செய்து விற்பனை செய்வோம் என்று கூறினர்.