நரசிங்கபுரம், ஆக.28: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆறுகளூரில் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் உட்பகுதியில் 8 பைரவர்களுக்கு தனித்தனியே சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதிகளில் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று நள்ளிரவு 12 மணியளவில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்படும். இந்நிகழ்ச்சியில், சேலம் மாவட்டம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஆத்தூர், பெரம்பலூர், திருச்சி, சென்னை, திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று முன்தினம் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்க திரளான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். இதனால், கூட்டம் அலைமோதியது. நள்ளிரவு பூஜையின்போது கட்டுக்கடங்காத கூட்டதால், நெரிசலில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் சிரமத்திற்குள்ளாகினர். கூட்ட நெரிசலை சமாளிக்க ஆத்தூர், தலைவாசல் போலீசார் 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி சதீஸ்குமார் தெரிவித்தார்.