கோவை, ஆக.13: வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றத்தை நாடி அனுமதி பெறுவோம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
கோவை கோனியம்மன் கோயிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கடும் தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு சிறுபான்மையாக இருக்கின்ற இந்துக்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாமல் தவிக்கின்றனர். மதத்தின் பெயரால் வங்கதேசத்தில் நடைபெறும் இந்துக்களின் மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும். ஒன்றிய அரசு இதில் உடனடியாக தலையிட்டு வங்கதேச இந்துக்களை பாதுகாக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பாக நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தோம். கோவை மாவட்டத்தில் 4 இடங்களில் நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால், அதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. நீதிமன்றத்தை நாடி ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை நிச்சயம் பெறுவோம். வங்காளதேச பிரதமர் சேக் ஹசீனாவிற்கு நம் நாடு அடைக்கலம் கொடுத்ததில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.