ஆரல்வாய்மொழி, அக்.19: ஆரல்வாய்மொழி கிறிஸ்துநகர் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (78). இவருக்கு ஞானபிரகாசி என்ற மனைவியும், 4 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். திருநெல்வேலி வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் செல்லத்துரை மகன் சிபு (35). காற்றாலையில் பணி செய்து வருகிறார். தற்போது ஆரல்வாய்மொழி தெற்கு பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 14ம் தேதி மாலை 3 மணியளவில் ஆரல்வாய்மொழி செண்பகராமன்புதூர் சாலையில் மேற்கு நோக்கி செல்லத்துரை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிபு ஆரல்வாய்மொழியில் இருந்து செண்பகராமன்புதூர் நோக்கி பைக்கில் வந்துள்ளார். எதிர்பாரதவிதமாக செல்லத்துரை மீது பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த செல்லத்துரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை செல்லத்துரை இறந்தார்.