கரூர், ஜூலை 10: தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கரூர் வருவாய்த்துறை சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். மேரி வரவேற்றார். எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மாநில பொதுச் செயலாளர் சேரலாதன் கலந்து கொண்டு பேசினார். மாநில பொருளாளர் ரமேஷ், கமிட்டி உறுப்பினர் ஜகஜோதி உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு பேசினர். மாநில துணைத்தலைவர் சுசிலா நன்றி கூறினார்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களுக்கு பேச்சு வார்த்தையின்படி 10 சதவீத ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும். மறுசீரமைப்பு என்ற பெயரில் முதற்கட்டமாக 87 நம்பிக்கை மையங்களை மூட வேண்டும் என்ற மத்திய அரசின் சுற்றறிக்கையை எய்ட்ஸ் நோயாளிகள் நலன் கருதி திரும்ப பெற வேண்டும். நம்பிக்கை மையங்களை தொடர்ந்து செயல்படுத்திட தமிழக அரசை வலியுறுத்தி 3 கட்ட போராட்டங்களை நடத்துவது என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.