விருதுநகர், அக்.4: பயிற்சி மையத்தை மாற்றக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகிறது. விருதுநகர் வட்டார ஆசிரியர்களுக்கு விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் 3ம் தேதி முதல் 6 ம்தேதி வரை 4 நாட்கள் 240 ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்தப்பட உள்ளது. ஆனால் பயிற்சி நடைபெறும் இடம் பேருந்து நிறுத்தம் இல்லாத பகுதி என கூறியும் பயிற்சி மையத்தை நகர் பகுதிக்கு மாற்றக் கோரியும் பயிற்சியை புறக்கணித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விருதுநகர் வட்டார செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி கல்வி மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். இதனையடுத்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, விருதுநகர் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜமுனா ராணி, வட்டாரக்கல்வி அலுவலர் கருப்பசாமி ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பயிற்சி மையம் விருதுநகர் நகர் பகுதிக்கு மாற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன் பேரில் போராட்டத்தைத் கைவிட்டு பயிற்சியில் கலந்து கொண்டனர்.