பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே, ஆரணி பகுதியில் கடையில் பதுக்கி வைத்திருந்த 30 கிலோ குட்கா பொருட்களை நேற்று முன்தினம் இரவு போலீசார் பறிமுதல் செய்தனர். பெரியபாளையம் அருகே ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று முன்தினம் மாலை ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், பெரியபாளையம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், எஸ்ஐ முனிரத்தினம் தலைமையில் தனிப்படை போலீசார் ஆரணி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஆரணி பகுதியில் ஒரு பெட்டிக் கடையில் சோதனை செய்தபோது, அங்கு விற்பனைக்காக குட்கா போதைபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 30 கிலோ குட்கா போதைபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெட்டிக் கடையில் குட்கா பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த இளவரசன்(36), விஜயன்(67) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.