ஆரணி, ஜூன் 16: ஆரணி அருகே நெசவுத்தொழிலாளி வீட்டில் 5 சவரன் நகை திருடியவரை போலீசார் நேற்று கைது செய்தனர். ஆரணி அடுத்த வடுக்கசாத்து கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார்(40), நெசவுத்தொழிலாளி. இவரது மனைவி சரிதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 12ம் தேதி சாந்தகுமார் வழக்கம்போல் நெசவு வேலைக்கு சென்றுள்ளார். அவரது மகன், மகள் பள்ளிக்கு சென்றதால் மனைவி சரிதா வீட்டை பூட்டிக்கொண்டு விவசாய வேலைக்கு சென்றுள்ளார்.
பின்னர், மாலை இருவரும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தனர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 5 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சாந்தகுமார் கொடுத்த புகாரின்பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அதே கிராமத்தை சேர்ந்த நெசவுத்தொழிலாளி பாபு(40) என்பவரை சந்தேகத்தின்பேரில் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், சாந்தகுமார் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரிடம் இருந்து நகையை மீட்டனர். பின்னர், பாபுவை கைது செய்து வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.