ஆரணி, ஆக.19: ஆரணி அடுத்த சிறுமூர் கிராமத்தில் நேற்று நடந்த மாடு விடும் விழாவில் 300 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. விழாவில் காளைகள் முட்டியதில் 23 பேர் காயம் அடைந்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சிறுமூர் கிராமத்தில் உள்ள சிறுபாத்தம்மன் கோயிலில் ஆடி வெள்ளி திருவிழாவையொட்டி 16ம் ஆண்டு காளை விடும் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. முன்னதாக காளைகள் ஓடும் பாதையில் மண் கொட்டப்பட்டு இருபுறமும் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.
சிறப்பு அழைப்பாளராக ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு காளை விடும் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தொடர்ந்து, அவிழ்த்து விடப்பட்ட காளைகள் வீதியில் சீறிப்பாய்ந்து ஓடின. ஆரணி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாகத்துடன் காளைகளை விரட்டிக் சென்று விழாவை கண்டுகளித்தனர். குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடந்த காளைக்கு முதல் பரிசாக ₹75 ஆயிரம், இரண்டாம் பரிசாக ₹65 ஆயிரம், மூன்றாம் பரிசாக ₹50 ஆயிரம் உட்பட 81 பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.