மதுரை, ஆக. 13: மதுரை கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கை: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் பொருளாதார மேப்பாட்டிற்காகவும், 10 பேர் குழு அமைத்து ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் அமைக்க தலா ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 20 வயது நிரம்பிய, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையில் பயிற்சி பெற்ற குழு மற்றும் கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற விதவைகள் அமைக்கும் குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
குழுவில் உள்ள 10 பேருக்கும் தையல் தெரிந்திருக்க வேண்டும். குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் குழுவினர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கூறியுள்ளார்.