கிருஷ்ணகிரி, ஜூலை 16: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொடூரமான ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை முற்றிலும் அழிக்க வேண்டும் என்றும், தடையை மீறி அதனை வளர்ப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் முறைகேடாக வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகை மீன்கள், மற்ற நீர்வாழ் உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் ஆபத்து விளைவிப்பவை. தாங்கள் வாழ்வதற்காக மற்ற நீர்வாழ் உயிரினங்களை இரையாக சாப்பிட்டு அழித்து விடும் தன்மை கொண்டது. கழிவுநீர், ரசாயன கழிவுநீர், குளம், குட்டை உட்பட அசுத்தமான தண்ணீரிலும் வாழும் தன்மை கொண்டவை. தண்ணீரில் இருந்து எடுத்து நிலத்தில் போட்டால் சுமார் 2 நாட்கள் வரை உயிருடன் இருக்கக்கூடியது.
இப்படி ஆபத்தான தன்மை கொண்ட இந்த மீன்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வளர்க்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை சாப்பிடுவதால், தோல் வியாதிகள், ஒவ்வாமை, புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், ரத்த சோகை மற்றும் தோல் அரிப்பு தொடர்பான பிரச்னைகளும் உருவாகும். குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோர் தொடர்ந்து சாப்பிட்டால், அவர்களுக்கு மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய பசுமை ஆணைய தீர்ப்பாயத்தின் ஆணையின்படி, வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தடை விதித்துள்ளது. காற்று சுவாச மீன்களான இவை, தொடர்ந்து இடைவிடாமல் மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவையாகும். மேலும், 8 ஆண்டுகள் வாழக்கூடியவை. இந்த மீன்கள் நீர்நிலைகளில் நுழைந்து விட்டால், அதனை அழிப்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். இம்மீன்கள் மிகக்குறைந்த அளவு தண்ணீரிலும் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவையாகும். இம்மீன்கள் நமது நாட்டின் பாரம்பரிய நன்னீர் மீன் இனங்களையும், அதன் முட்டைகளையும் உணவாக்கிக் கொள்கின்றன. இதனால், பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் அபாயம் உள்ளது.
இந்த மீன்களை பண்ணை குட்டைகளிலோ, அல்லது மீன் வளர்ப்பு குளங்களிலோ இருப்பு செய்து வளர்த்தால், மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில், குளங்களிலிருந்து தப்பித்து விட வாய்ப்புள்ளது. ஆறுகளில் தஞ்சமடைந்து பிற மீன் இனங்களை அழிப்பதால், ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை தவிர, வேறு எந்த மீன்களும் பிழைக்க வாய்ப்பில்லாத நிலை உருவாகும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, நமது உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதற்கும், அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கும் வழி இல்லாமல் போய்விடும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட, கொடூரமான ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை இருப்பு செய்து வளர்க்க வேண்டாம். ஏற்கனவே மீன் பண்ணைகளில் வளர்த்து வருவோர் முற்றிலுமாக அழிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மீறி ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்த்தால், குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள், அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை, மீன்வளத்துறையின் ஆலோசனையை பெற்று வளர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதியதாக மீன்பண்ணை அமைக்கும் மீன் விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை முதன்மை நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு, தங்கள் மீன் பண்ணையை பதிவு செய்து, அரசு வழங்கும் மானியத்தை பெற்று பயனடையலாம். மேலும், விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், கதவு எண்.24-25, கோஆப்ரேட்டிவ் காலனி, 4வது கிராஸ், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.