வேலூர், அக்.5: வேலூரில் சீர்வரிசையில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் இல்லை எனக்கூறி திருமணத்தை 2 மணி நேரம் நிறுத்தி வைத்தாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்தார். ேவலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்வு கூட்டம் ஏடிஎஸ்பிக்கள் பாஸ்கரன், கோட்டீஸ்வரன் ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மனு கொடுக்க வரும் பொதுமக்களை இருக்கையில் அமரவைத்து மனுக்கள் பெற வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் நேற்று பொதுமக்கள் அமரவைத்து மனுக்கள் பெறப்பட்டது.
இதில் வேலூர் அல்லாபுரத்ைத சேர்ந்த இளம்பெண் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு கடந்த 2019ம் ஆண்டு பெற்றோர் முன்னிலை ஓல்டுடவுனை சேர்ந்த தாவீது என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணமத்தின்போது, சீர்வரிசையில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் இல்லை எனக்கூறி 2 மணி நேரம் திருமணத்தை நிறுத்தி வைத்தனர். தொடர்ந்து அந்த பொருட்களை வாங்கித் தருவதாக உறுதியளித்த பின்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் எனது கணவர் திருமணத்திற்கு முன்பே பல பெண்கள், திருநங்கையுடன் தவறான உறவை வைத்திருந்துள்ளார். அதனை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார். அவரது தாய் வற்புறுத்தியதால் என்னை திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார். மேலும், ஆட்டோவில் சவாரிக்கு வரும் பெண்களை மயக்கி, அவர்களுடன் உல்லாசமாக இருப்பதை செல்போனில் வீடியோ எடுக்கிறார்.
பின்னர் அவர்களை மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். குடித்துவிட்டு என்னை அடித்து துன்புறுத்தி வந்தார். 7 மாத கர்ப்பினியாக இருந்தபோது, என்னை வீட்டை விட்டு துரத்தினர். கணவரின் தவறான செயல்களில் அவரது தாய், அவரது அக்கா, அக்காவின் கணவர் ஆகியோர் உடந்தையாக உள்ளனர். எனக்கு குழந்தை பிறந்த பிறகும் 3 முறை மட்டுமே வந்து பார்த்துள்ளார். மேலும் குழந்தைக்கு எதுவும் செய்தது கிடையாது. என்னையும், எனது தாயையும் அடிக்க முயன்றார். இதுகுறித்து வேலூர் மகளிர் போலீசில் புகார் அளித்தேன். எனது மாமியார் வேறு பெண்னை, எனது கணவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். எனவே வரதட்சனை கொடுமைப்படுத்திய கணவர், அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.