மதுரை, ஆக. 12: அழகர்கோவில் மலைப்பகுதியில் உலா வரும் காட்டெருமைகளின் ஆபத்தை உணராமல், பக்தர்கள் புகைப்படம் எடுப்பதால் அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலின் மலைப்பகுதியில் குரங்கு, கீரிப்பிள்ளை, வவ்வால், பல்வேறு வகையான குருவி இனங்கள் மற்றும் காட்டெருமைகள் வசிக்கின்றன. இதில் மாலை நேரங்களில் மலையில் இருந்து காட்டெருமைகள் கூட்டமாகவோ, தனியாகவோ அங்குள்ள நீரோடை வாய்க்காலில் தண்ணீர் மற்றும் உணவு அருந்த வருவது வழக்கம்.
இந்நிலையில் மலைமேல் கடந்த சில வாரங்களாக கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. இதன்படி பக்தர்கள் எடுத்துவரும் உணவு பொருட்களில் மீதமிருப்பதை ஆங்காங்கே கொட்டிவிட்டுச் செல்கின்றனர். அந்த உணவுகளை தேடி காட்டெருமைகள் வருவதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் காட்டெருமைகளை பார்த்து மகிழ்கின்றனர். இதுஒருபுறம் இருக்க, பலரும் ஆபத்தை உணராமல் அவற்றின் அருகில் சென்று செல்போன்களில் புகைப்படம் எடுக்கின்றனர். எனவே, வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில், பொதுமக்களுக்கு வனவிலங்குகளின் ஆபத்து குறித்து எச்சரிக்கும் வகையில் விழிப்புணர்வு பலகைகள் வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.