ஸ்பிக்நகர்,அக்.17: ஸ்பிக் நகரை அடுத்த அத்திமரப்பட்டியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்திமரப்பட்டியில் இருந்து ஸ்பிக்நகர் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பத்தில் பாதிக்குமேல் தனியாகவும் கீழ்பகுதி தனியாகவும் சிமெண்ட் பூச்சுகள் இல்லாமல் கம்பியில் நிற்கிறது. இந்த பகுதி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் விவசாயிகள், வியாபாரிகள் என பலதரப்பட்ட மக்கள் சென்று வருகின்றனர். ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தின் அருகே செல்லும்போது ஒரு வித பயத்துடன் செல்ல வேண்டிய சூழல் இருந்து வருகிறது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின் கம்பத்தை அகற்றுவதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் புதிய மின் கம்பம் கொண்டு வந்து போடப்பட்டுள்ளது. ஆனால் அதன் பிறகு எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.