புதுச்சேரி, மே 25: ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் என கூறி, புதுச்சேரி பெண்ணிடம் ரூ.35.14 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு டெலிகிராம் மூலம் மர்ம நபர் தொடர்பு கொண்டு பகுதி நேர வேலை வாய்ப்பு குறித்து பேசியுள்ளார். அதில் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி அப்பெண்ணும், மர்ம நபருக்கு பல்வேறு தவணைகளில் ரூ.35.14 லட்சத்தை அனுப்பி, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்துள்ளார். பின்னர் அதில் சம்பாதித்து பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.
புதுவை கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண்ணை, மர்ம நபர் ஒருவர் டெலிகிராம் மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, பங்கு சந்தையில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாம் என கூறி, அப்பெண்ணிடம் ரூ.60 ஆயிரத்தை பறித்துள்ளார். புதுவையை சேர்ந்த பெண் ஒருவர், பிரபல ஓட்டலில் தங்குவதற்கு விடுதியை முன்பதிவு செய்ய இணையதளத்தில் தேடியுள்ளார். அதில், போலியான இணையதளத்தில் முன்பதிவு செய்து ரூ.12,500 மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். மேற்கூறிய நபர்கள் மொத்தமாக ரூ.35.86 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.