திருவண்ணாமலை, ஜூலை 3: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா விமரிைசயாக நடந்தது. அதையொட்டி, ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய சிவகாமசுந்தரி சமேத நடராஜர் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் ஆனி திருமஞ்சனம் நடராஜருக்கான சிறப்புமிக்க வழிபாடாகும். மார்கழி திருவாதிரையில் அருேணாதயகால பூஜை, மாசி வளர்பிறை சதுர்த்தியில் சந்திகால பூஜை, சித்திரை திருவோணத்தில் நண்பகல் பூஜை, ஆனி உத்திரத்தில் சாயரட்சை பூஜை, ஆவணி வளர்பிறை சதுர்த்தி மற்றும் புரட்டாசி வளர்பிறை சதுர்த்திகளில் அர்த்தஜாம பூஜை ஆகியவை நடராஜருக்கு மிகவும் உகந்தது.
மேலும், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று, சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்வதுதான் ஆனி திருமஞ்சனம். அதன்படி, திருவண்ணாமலை அண்ணாலையார் கோயிலில் நேற்று ஆனி திருமஞ்சன விழா விமரிசையாக நடந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அண்ணாமலையார் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மையும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, நேற்று காலை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும், 16 வகையான தீபங்களால் தீபாராதனையும் நடந்தது. பின்னர், அலங்கார ரூபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் 5ம் பிரகாரத்தில் இருந்து திருமஞ்சன கோபுரம் வழியாக புறப்பட்டு, மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அண்ணாமலையார் கோயிலில் நடக்கும் உற்சவங்களின்போது சுவாமி புறப்பாடு ராஜகோபுரம் அடுத்துள்ள திட்டி வாசல் வழியாகவே நடப்பது மரபு. ஆனால், நடராஜர் புறப்பாடு மட்டும் திருமஞ்சன கோபுரம் வழியாக நடப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். அதனால், கோயிலில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.