திருமலை: ஆந்திர முதல்வரின் சகோதரி ஷர்மிளா தெலங்கானாவில் திடீரென கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகரரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரியுமான, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தெலங்கானா கட்சி தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா நேற்றுமுன்தினம் இரவு தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் நகரில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது மகபூபாபாத் எம்எல்ஏ சங்கர் நாயக் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஷர்மிளா பெடோலு புறநகர் பகுதியில் இரவு தங்கினார். கூட்டத்தில் எம்எல்ஏ சங்கர்நாயக் குறித்து அவதூறாக பேசியதையறிந்த எம்எல்ஏவின் ஆதரவாளர்கள், ஷர்மிளா தங்கிய இடத்திற்கு சென்று முற்றுகை மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஷர்மிளாவின் பேனர்களை தீயிட்டு கொளுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எம்எல்ஏ சங்கர் நாயக் குறித்து விமர்சித்ததாக ஷர்மிளா மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் அவர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்நிலையில் நேற்று பாத யாத்திரைக்கு புறப்பட்ட ஷர்மிளாவை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும், ஷர்மிளாவின் பாதயாத்திரை ரத்து செய்யப்படுவதாக போலீசார் நோட்டீஸ் கொடுத்தனர். கைது செய்யப்பட்ட ஷர்மிளாவை, கம்மம், சூர்யாபேட்டை வழியாக ஐதராபாத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். ஷர்மிளா கைது செய்யப்பட்டதையடுத்து அங்கு பரபரப்பான சூழல் நிலவியது….