திருமலை: ஆந்திராவில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.13,05,663 கோடியில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 352 நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. ஆந்திர மாநில அரசு 3 ஆண்டுகளுக்கு பிறகு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்தது. நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை 2 நாட்கள் நடைபெற்ற இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்நாளில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு தொழிலதிபர்களும், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களும் பங்கேற்றனர். மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.இந்த 2 நாள் மாநாட்டில் ஆந்திராவில் ரூ.13 லட்சத்து 5 ஆயிரத்து 663 கோடிகளை முதலீடு செய்ய 352 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இதில் முதல் நாளில், ரூ.11,87,756 கோடி ரூபாய் மதிப்பிலான 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. தொடர்ந்து 2வது நாளான நேற்று 13க்கும் மேற்பட்ட துறைகளில் ரூ.1.17 லட்சம் கோடி மதிப்பிலான 260 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் முதலீட்டாளர்களை ஈர்த்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் தங்கள் நிறுவனத்தை நிறுவி செயல்படுத்தும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில தொழிற்சாலைகள் துறை அமைச்சர் குடிவாடா அமர்நாத் தெரிவித்தார்….