அம்பத்தூர்: பட்டரைவாக்கம் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்படி, இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகம்படும்படி அப்பகுதியில் சுற்றிதிரிந்த வாலிபரை பிடித்து, அவரது பையை சோதனை செய்தபோது, கஞ்சா பார்சல் சிக்கியது.
இதையடுத்து, போலீசார் அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர் நேதாஜி தெருவைச் சேர்ந்த சீனு(23) என்பதும், ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, போலீசார், சீனுவை கைது செய்தனர். ரூ.6.60 லட்சம் மதிப்பிலான 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், சீனுவை புழல் சிறையில் அடைத்தனர்.