தூத்துக்குடி, ஜூன் 26: தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி குருவெங்கட்ராஜ் உத்தரவின் பேரில் மதுவிலக்கு தனிப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி சத்யா நகரில் 2 பைக்குகளில் 4 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து சோதனை நடத்தியதில் அவர்களிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர்கள், தூத்துக்குடி கால்டுவெல் காலனி 2வது கிழக்கு தெருவை சேர்ந்த ராஜ்குமார் (30), தூத்துக்குடி அண்ணா நகர் 4வது தெருவை சேர்ந்த அருண் (24), தூத்துக்குடி டிஎம்பி காலனியை சேர்ந்த மாரிலிங்கம் (24) மற்றும் தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டை சேர்ந்த சந்தானபெருமாள் (27) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து தூத்துக்குடியில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவர்களை கைது செய்த மதுவிலக்கு போலீசார், 2 கிலோ 700 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். மேலும் இவர்களிடம் இருந்து 2 பைக்குகள், 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.