போளூர், ஆக.29: போளூர் பஸ்நிலையத்தில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து, ஆந்திராவில் இருந்து கடத்திய 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போளூர் டிஎஸ்பி செ.கோவிந்தசாமிக்கு ரகசிய தகவல் வந்தது. அதனடிப்படையில் போளூர் இன்ஸ்பெக்டர் ப.ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் த.தட்சணாமூர்த்தி ஆகியோர் போளூர் பஸ் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், போளூர் அல்லிநகர் பகுதியை சேர்ந்த குமார் மகன் சந்ேதாஷ்(19), குப்பன் மகன் சத்ய நாராயணமூர்த்தி(22), இளங்கோ மகன் வினோத்(20), என தெரியவந்தது. மேலும் இவர்கள் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து போளூரில் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து 450 கிராம் கஞ்சா, 2 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.